முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக யாராவது களம் இறங்கினால்.....
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன் என்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடுக்கியில் யாராவது களமிறங்கினால், தோற்கடிப்போம்
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பாளர்கள், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு வடிவத்தில், பல்வேறு காலகட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் முல்லைப் பெரியாறு அணை என்பதை தாண்டி, கேரளாவில் உட்புறங்களிலிருந்து இடுக்கி மாவட்டத்தில் குடியேறிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களுக்கு, பட்டயம் பெற்றுக் கொடுப்பதாகும். பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த கிறித்தவ என்ஜிஓ க்கள், 2006ம் கால கட்டத்தில் ஹைரேஞ்ச் சம்ரக்ஷ்ண சமிதி என்கிற பெயரில் உருமாற்றமடைந்தார்கள்.
உலகம் முழுவதும் பெரிய தொடர்புகளை கொண்டிருந்த பாதர் ஜெபஸ்டியன் கொச்சுபுரக்கல்தான் இதன் தலைமை நிறுவனர். நுனி நாக்கு ஆங்கிலத்தில் மொழியை உருட்டி விளையாடும் இந்த அருட்தந்தை, அமைப்பை தொடங்கியதும் ஆரம்பித்த முதல் வேலை...1997 ஆம் ஆண்டுக்கு முன் இடுக்கி மாவட்டத்திற்கு குடி பெயர்ந்து வந்த அனைத்து மலையாள விவசாயிகளுக்கும் பட்டயம் வேண்டும் என்பதாகும். அந்தக் கோரிக்கையில் மறந்தும் கூட தமிழ் விவசாயிகள் எவரையும் அடையாளப்படுத்தவில்லை இந்த அருட்தந்தை என்பதை கவனிக்க வேண்டும்.
தங்களுக்கு பட்டயம் பெற்றுக் கொடுப்பதற்காக வந்த தேவதூதனாகவே இடுக்கி மாவட்ட குடியேற்றவாசிகள், அருட்தந்தையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அருட்தந்தையும் அதற்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டார்.மெல்ல மெல்ல ஹை ரேஞ்ச் சம்ரக்ஷ்ண சமிதி இடுக்கி மாவட்டம் முழுவதும் வேர் பரப்ப ஆரம்பித்தது. 2010 க்குள் இடுக்கி மாவட்டத்தில் சமிதி இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை தீவிரமடைந்தது.
ஆனால் ஒரு விதத்தில் அருட்தந்தை ஜெபஸ்டியனை பாராட்டி தான் ஆகவேண்டும். அதாவது இடுக்கி மாவட்டத்தில் குடியேறிய 20,000 க்கும் மேற்பட்ட மலையாள குடியேற்றவாசிகளுக்கும் பட்டயம் பெற்றுக் கொடுத்ததும்,சமிதி கலைக்கப்படும் என்று தைரியமாக அறிவித்த தைரியசாலி அவர்.
இந்த நிலையில் தான் மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க, பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையிலான கமிட்டியை அறிவித்தது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்.
நாங்கள் குடியேற்ற மலையாளிகளுக்கு பட்டயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். காட்கில் கமிட்டி என்னவென்றால், பட்டய பூமிகளை எல்லாம் கையகப்படுத்த வேண்டும் என்று களத்தில் நிற்பதாக பற்ற வைத்த சமிதி, தீவிரமான போராட்டங்களை காட்கில் கமிட்டி அறிக்கைக்கு எதிராக முன்னெடுத்தது.
தங்கள் பூமிக்கு பட்டயம் கிடைக்கும் என்று நம்பிக் கிடந்த மலையாள குடியேற்ற வாசிகள், சமிதியின் அழைப்பை ஏற்று வீதிக்கு வந்தார்கள். போராட்டத்தை வெகு கவனமாக கேரளா முழுவதும் கட்டமைத்தது சமிதி. காட்கில் கமிட்டி ஆய்வு செய்த ஏழு மாநிலங்களில் எங்கினும் எழாத எதிர்ப்பு, கேரளாவில் மட்டும் கிளம்பியது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாத டெல்லியில் இருக்கும் மலையாள லாபி, கவனமாக காட்கில் கமிட்டி அறிக்கையை புறந்தள்ள செய்தது.
இடையிடையே முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் போராட்டங்களை ஆங்காங்கே நடத்தினார்கள். முல்லைப் பெரியாறு அணையை எதிர்க்காமல் கேரளாவில் எந்த ஒரு இயக்கமும், எந்த ஒரு கட்சியும் செயல்பட முடியாது என்பது எழுதப்படாத விதி.ஆனால் அன்றைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கேபினட் அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், காட்கில் கமிட்டி ஆய்வுக்கு மாற்றாக, இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார்.
கஸ்தூரி ரங்கன் ஒரு மலையாளியாக இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டவராக இருந்ததால், கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைக்கு எதிராகவும் சமிதி களத்தில் இறங்கியது.இடுக்கி மாவட்டத்தில் முதலில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்தவர்கள், பத்து நாட்களில் கேரளா முழுவதும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தார்கள். கிட்டத்தட்ட கேரளா முழுமையும் ஜெட் வேகத்தில் சென்று சேர்ந்தது சமிதி.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஒருபுறம் மலையாள அப்பாவிகளுக்கு பட்டய ஆசை கொடுத்த சமிதி, இன்னொரு புறம் முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பையும் தாங்கி நின்றதால், எந்தக் கட்சியிடமும் ஆலோசனை கேட்காமல், சமிதியின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் ஜோயிஸ் ஜார்ஜை களத்தில் இறக்கியது.
பிரம்மாண்டமான கூட்டத்துடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜார்ஜ், நான் வெற்றி பெற்றால், இடுக்கி மாவட்டத்திற்கு 1997க்கு முன்பாக குடிவந்தவர்களுக்கான பட்டயத்தை பெற்று தருவதோடு, கேரளாவில் உள்ள ஏழு மாவட்ட மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையையும் உடைத்தெறிவேன் என்று முழங்கினார். அதுவரை சமிதியை ஏற்காதவர்களும் ,அதனுடைய முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வீரியமிகுந்த பேச்சால், அதனை நாடி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதர் ஜெபாஸ்டியன் தெளிவான ஒரு அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோளாக வைத்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாதர் ஜெபாஸ்டியனின் வேண்டுகோளை ஏற்று, சமிதியின் வேட்பாளரான அட்வகேட் ஜார்ஜை தன்னுடைய கூட்டணியில் இணைத்துக் கொண்டது.
இடுக்கி மாவட்டம் முழுவதும், அலையலையாக சமிதியின் பின்னால் திரண்ட மக்களால், 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டீன் குரியா கோசை வீழ்த்தினார் சமிதி யின் வேட்பாளர் அட்வகேட் ஜோயிஸ் ஜார்ஜ். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரித்த இன்னொரு சுயேட்சை வேட்பாளரான நடிகர் இன்னோசென்ட், சாலக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன், புதிய அணையைக் கட்டுவேன், 20,000 க்கும் மேற்பட்ட மலையாள அப்பாவிகளுக்கு பட்டயம் பெற்று தருவேன் என்று தன்னுடைய பரப்புரையில் அட்வகேட் ஜார்ஜ் முழங்கினார்,
வெற்றி பெற்றதும் செய்த முதல் வேலை, தேவிகுளம் தாலுகாவில் உள்ள கொட்டக்கம்பூர் எனும் தமிழர் கிராமத்தை யொட்டி 26 ஏக்கர் நிலத்தை திருட்டுத்தனமாக பத்திர பதிவு செய்தார். அது போலி பத்திரம் என்று நிரூபிக்கப்பட்டு, தேவிகுளம் சப் கலெக்டராக இருந்த டாக்டர் ரேணு ராஜ், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு தேவிகுளம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே சம்மன் அனுப்பினார்.
அப்பாவிகளுக்கு பட்டா பெற்று தருவதாக கதை விட்ட சமிதியின் நாடாளுமன்ற உறுப்பினர், கடைசியில் போலிப்பட்டயத்தில் சிக்கி தன்னுடைய பதவிக்காலம் முழுவதும் சொந்த தொகுதிக்கே வராமல் ஓடி ஒளிந்து கொண்டார்.
2014 நாடாளுமன்ற தேர்தல் கொடுத்த தெம்பில், அடுத்த 2015 ல் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் களம் இறங்கியதோடு, இடுக்கி மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 70 வார்டு மெம்பர்களை பெற்றது சமிதி. இத்தனை தேர்தல் வெற்றிக்கு பிறகும் சமிதி யின் ஆட்டம் நிற்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையை அடுத்து இருக்கும் சப்பாத்து எனும் கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் முன்பு, ஒரு பந்தலை போட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் இருந்தது ஒரு கும்பல். அந்த கும்பலுக்கு பின்னால் இருந்ததும் இதே சமிதி தான். இன்னொரு ஆதரவு அருட்தந்தை ஜோ நிரப்பல்.
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக இடுக்கி மாவட்டம் முழுவதும் நடந்த அத்தனை போராட்டங்களுக்கு பின்னாலும், சமிதி வலுவாக கால் ஊன்றி நின்றது. இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரான ஜார்ஜ், போராட்டக்களத்திற்கு வர முடியாத நெருக்கடியில், அருட்தந்தை ஜெபாஸ்டியனே களங்களை ஒருங்கிணைத்தார்.
மலையாள அப்பாவிகளுக்கு பட்டயம் பெற்று தருவோம். முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம். கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த விட மாட்டோம் என்று குரல் எழுப்பிய சமிதி, 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதே குற்றப் பின்னணி கொண்ட ஜார்ஜை, தன்னுடைய வேட்பாளராக இடதுசாரிகளின் ஆதரவோடு இடுக்கியில் களமிறக்கியது. அமைப்பாக இருந்தபோது இருந்த வீரியம், 70 உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளையும் ,ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்ற பிறகு சமிதிக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மலையாள அப்பாவிகள், அந்தத் தேர்தலில் சமிதியின் வேட்பாளரான ஜோயிஸ் ஜார்ஜை 52 ஆயிரம் வாக்குகளில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார்கள்.
ஆனாலும் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை காரணம் காட்டி வீதிக்கு வரும் இந்த சமிதி இன்றைக்கு ஒரு செத்த பாம்பாக காணப்படுகிறது. அப்பாவிகளுக்கு பட்டயம் பெற்று தருகிறோம் என்று வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் போகிறோம் என்று வெளிநாடுகளில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கிலான டாலர்களுக்கும் கணக்கில்லை.
கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த விட மாட்டோம் என்று இடுக்கி மாவட்ட நில முதலாளிகளிடம் பெற்ற கையூட்டு என சமிதி பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தாலும் முல்லைப் பெரியாறு அணையின் கிட்டே கூட அதனால் நெருங்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே வெற்றி பெறச்செய்யுமளவிற்கு செல்வாக்கு காட்டிய சமிதியையும், அதன் அருட்தந்தை செபாஸ்டியனையும் தற்போது ஆளைக் காணவில்லை.
இவர்களை கண்டுபிடிப்பவர்கள் 9789379077 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இனிமேல் யாராவது முல்லைப்பெரியாறு அணையினை உடைபேன் எனக்கூறி களம் இறங்கினால் அவர்களுக்கு அடுத்த பேரிடியை நிச்சயம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் இடுக்கி மாவட்ட தமிழர்கள் மூலமே வழங்கும். இவ்வாறு கூறியுள்ளார்.(குறிப்பு ச.அன்வர்பாலசிங்கம் இடுக்கி தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடு வது தொடர்பாக ஆலோசித்து வருகிறார். முக்கிய தேசியக்கட்சிகள் கூட இவரை களம் இறக்க பேச்சு நடத்தி வருகின்றன)