தமிழ் சினிமாவில் காலத்தை வென்ற காதல் படங்கள்..
காதல் கதைகள் என்றைக்கும் எவர் க்ரீன் தான். அந்த வகையில், தமிழ் சினிமாவில் காலங்களை வென்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன
தேவதாஸ்: வங்காள எழுத்தாளரான சரத் சந்திரரின் நாவல். கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற கதை. நாகேஸ்வர ராவ் சாவித்திரி நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்.
தேவதாஸ் எனும் பணக்கார வீட்டுப் பையனுக்கும் பக்கத்து வீட்டு பார்வதிக்கும் சிறுவயது முதலாகவே சிநேகம். வாலிப வயதில் காதலாக மாறுகிறது. பார்வதி, ஒரு பனி இரவில் புறப்பட்டு வந்து திருமணம் செய்துகொள்வோம் வா என தேவதாஸைக் கூப்பிடுகிறாள். 'எல்லாம் பெரியவர்கள் சம்மதத்துடன் நடக்கட்டும்' என மறுத்து விடுகிறான். தன் வீட்டார் பார்த்து வைத்துள்ள வயோதிக பணக்காரரை மணக்கிறாள். தேவதாஸ் தாடி வளர்த்துக் கொண்டு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றான். காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும் உலகப் பிரசித்தம். 'உலகே மாயம்' பாடல் கண்டசாலாவின் குரலில் உலகமெங்கும் ஒலித்தது.
கல்யாணப்பரிசு: காதல் மன்னன் ஜெமினி கணேசனும், அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் நடித்த படம். ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான படம். தமிழ் சினிமாவின் முதல் ட்ரெண்ட் செட்டரான சி.வி.ஶ்ரீதரின் முதல் படம். ஹீரோயின், அக்காவின் அரவணைப்பில் வளர்கிறாள். ஹீரோயின் வீட்டில் குடியிருக்கும் ஹீரோவைக் காதலிக்கிறார் தங்கை. ஹீரோ தங்கையின் மீது அன்பு பாராட்டுகிறார். அதே வாலிபனை அக்காவும் மனதால் விரும்புகிறார். விரும்புவதோடு நில்லாமல் தன் காதலுக்கு துணை நின்று நிறைவேற்றிட, தங்கையிடமே கோரிக்கையும் வைக்கிறார்.
அக்காவின் ஆசையை நிறைவேற்றி, தன் காதலை தியாகம் செய்கிறாள் தங்கை. ஆனால், ஒரு குழந்தையைக் கொடுத்து அக்கா இறந்து போகிறாள். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடி, தன் பழைய காதலியின் திருமணத்தில் தன் குழந்தையை கல்யாணப் பரிசாக கொடுத்து விட்டு, விரக்தியுடன் நடந்து செல்கிறான் நாயகன். படத்தின், க்ளைமேக்ஸ் பாடலுக்கு எழுந்து நின்று கைதட்டியதோடு முதல் ஸ்டேண்டிங் ஓவேஸனை இந்தப் படத்துக்குத்தான் தந்தார்கள் ரசிகர்கள்.
அன்பே வா: கம் செப்டம்பர் ( Come September) ஆங்கிலப் படம் உலகம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கியதோடு, தமிழக நகரங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆக்ஷன் படங்களாக எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் ஹீரோவாக நடித்த படம் அன்பே வா. படம் முழுவதும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஏழாம் பொருத்தம். எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் செல்லமான சண்டைகள். முறைப்புகள். ஆனாலும் அவர்களுக்குள் நளினமாக ஒரு காதல். போதாக்குறைக்கு நாகேசின் கலக்கல் காமெடி. சிம்லாவில் ஷூட்டிங்; ஏ.வி.எம் தயாரிப்பு; திகட்டாத பாடல்கள் என இப்போதும் அன்பே வா காதலர்களுக்கு ரொம்பவே ஃபேவரிட்.
வசந்த மாளிகை: “இது இறந்துபோன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடு இருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல. சந்நிதி. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால், அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழப்போகும் வீட்டுக்கு தோரணங்களாக தொங்க விட்டிருப்பேன்''. சிவாஜி, வாணிஶ்ரீ நடித்த காதல் காவியம். காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. தெலுங்கில் நாகேஷ்வர் ராவ் நடித்த படம்தான் என்றாலும், அவரே படத்தைப் பார்த்து வியந்து பாராட்டினார்.
அன்னக்கிளி: வெள்ளந்தியாக அழகான கிராமியச் சூழலில் வாழும் கிராமத்துப் பெண் சுஜாதாவுக்கும், ஊருக்கு வாத்தியாராகப் பாடம் சொல்லித்தர வரும் சிவக்குமாருக்கும் காதல். கிராமத்து அழகியல், சுவாரஸ்யங்கள், பழக்க வழக்கங்கள், ஆறுகள், மலைகள், டூரிங் டாக்கீஸ் என கறுப்பு வெள்ளையிலேயே ஒரு அருமையான காதல் கதை. இளையராஜாவுக்கு முதல் படம். மச்சானைப் பார்த்தீங்களா? மல வாழைத்தோப்புக்குள்ளே...’ என்னும் பாடல் ஒலிக்காத கிராமமில்லை. முதன்முறையாக கிராமிய மணம் முழுமையாக வீசிய காதல்கதை. ஆர்.செல்வராஜின் கதை கிராமிய தமிழ் சினிமாவுக்குப் போடப்பட்ட பூமி பூஜை.
ஒருதலை ராகம்: என் கதை முடியும் நேரமிது. என்பதைச் சொல்லும் பாடலிது. அன்பினில் வாழும் உள்ளமிது. அணையே இல்லா வெள்ளமிது. பேதைமை நிறைந்தது என் வாழ்வு...அதில் பேதையையும் வரைந்தது சிலகோடு. பித்தென்று சிரிப்பது உள் மனது. அதில் வித்தொன்று போட்டது அவள் உறவு. ரெயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள். உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்!
டி.ராஜேந்தரின் கதை, வசனம் பாடல்கள் இசையில் உருவான காதல் காவியம். முழுக்கமுழுக்க மலையாள புதுமுகங்கள். ராபர்ட் ராஜசேகரின் ஒளிப்பதிவு. படம் வெளியாகி 3-வது வாரத்தில் எல்லா திரை அரங்குகளிலும் இன்றே கடைசி...’ போட்டு எடுத்து விட்டார். அதன் பிறகு தேர்வடம் பிடித்தது போல் கல்லூரி மாணவர்கள் வந்தார்களே. ஜல்லிக்கட்டுக்கு முன் கடந்த 40 ஆண்டுகளில் மாணவர் படை திரண்டது டி.ஆரின் ஒரு தலை ராகத்துக்குத்தான்.
மரோசரித்ரா: இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய தெலுங்குப் படம் மரோசரித்ரா. கமல்ஹாசனும் சரிதாவும் இணைந்து நடித்த படம். பாலு சொப்னா இருவருமே பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள். பரஸ்பரம் பிடித்துப் போய் காதலர்களாகிறார்கள். இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒரு வருட காலம் ஒருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டும், என்பது நிபந்தனை. பலவித போராட்டங்களுக்குப்பின் வைராக்கியமாக இருந்து சேரப்போகும் நிலையில் மிகப் பெரும் சோகத்துடன் படம் முடிவடைகிறது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் 100 நாட்கள் 200 நாட்களென ஓடியதால் தமிழில் தயாரிக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் தயாராகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த 7 நாட்கள்: ‘’என்ட காதலி, உங்களுக்கு மனைவியாயிட்டு வரும். ஆனால், நிங்களோட மனைவி, எனிக்கி காதலியாயிட்டு வராது...’’ என்னும் வசனம் தமிழகம் முழுக்க ரொம்பவே ஃபேமஸ். தமிழ் ஹீரோக்கள் பலருக்கும் மலையாளப் பெண்கள் ஹீரோயினாக வந்த படங்கள் அநேகம் உண்டு. ஆனால், பாலக்காடு மாதவனாக பாக்யராஜும், வசந்தியாக அம்பிகாவும் நடித்த இந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் பெரும்பாலானவர்கள் சேனல் மாற்றாமல் இருப்பார்கள். படம் முழுவதும் காதலும் பாடலும் ஹாஜா ஷெரீப் காமெடியுமாக அத்தனை சிறப்பாக இருக்கும். டாக்டர் கேரக்டரில் ஜென்டில்மேனாக நடிகர் ராஜேஷ் நிறைவாகச் செய்திருப்பார்.
அலைகள் ஓய்வதில்லை: அக்ரஹாரத்துப் பையன் விச்சுவுக்கும் பட்டணத்தில் படித்து விட்டு சொந்த ஊருக்கும் வரும் மேரிக்கும் காதல். விச்சுவின் அம்மாவிடமே பாட்டு கற்றுக்கொள்ள வருகிறாள் மேரி. பாடல்கள், பின்னணி இசை, நடிப்பு, காட்சி அமைப்புகள் எல்லாமே படத்தின் கதாப்பாத்திரங்களை உயிர்ச்சித்திரங்களாக்கின. எல்லா ஊர்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதுடன், அப்போதைய முதல்வர் எம்,ஜி,ஆர் பாரதிராஜாவுக்கென்று தனி பாராட்டு விழாவே எடுத்தார். சமீபத்தில் கூட பாரதிராஜா இந்தப் படத்தை இப்போதுள்ள சூழ்நிலையில் எடுக்க முடியுமாவென தான் அஞ்சுவதாகக் கூறியுள்ளார். காதல் - ஆயுதங்களால் அழிக்க முடியாத தர்மம் என்பதை உரக்கச் சொன்ன படம்.
மூன்றாம் பிறை: காதல் கதைகளில் வித்தியாசமான கதைக்களம். எளிய கதாப்பாத்திரங்கள். சிக்கலில்லாத தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை. ஊட்டியின் அழகைச் சொல்ல இப்படி ஒரு பதிவு இனி வருமா? வந்தாலும், இதில் வரும் ஊட்டியின் அழகு இப்போதிருக்குமா? கமல்ஹாசன், ஶ்ரீதேவியின் நடிப்பில் இருவருமே உச்சம் தொட்ட படம். அதிலும் க்ளைமேக்ஸ்! இன்னமும் மனம் கேத்தி ஸ்டேஷனிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடலான ‘கண்ணே கலைமானே’ இடம்பெற்ற படம்.
வாழ்வே மாயம்: கிட்டத்தட்ட பழைய தேவதாஸ் கதையின் மாடர்ன் வெர்சன் என்றாலும், கமல்ஹாசனின் இளமைதுள்ளும் நடிப்பு, ஶ்ரீதேவியின் பேரழகும் 80-களில் வாலிபத்தில் காலடிவைத்தவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவை. கங்கை அமரனின் மிகச் சிறந்த இசையமைப்பில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
காதல் கோட்டை: அப்போதெல்லாம் போன், செல்போன், கம்ப்யூட்டர், ஃபேஸ் புக், வாட்ஸ் அப் வசதியெல்லாம் கிடையாது. உள்ளூரில் நண்பர்கள், பெண் நண்பர்கள் கிடைக்காதவர்களுக்கு, பேனா நண்பர்கள் என்னும் அமைப்பின் மூலம் பார்த்துக்கொள்ளாமலே பரஸ்பரம் கடிதம் எழுதி நண்பராவார்கள். இப்படி இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் அஜீத்தும் தேவயானியும் கடிதம் மூலமாகவே காதல் வளர்ப்பார்கள். காதல்கதைகளில் மிகமிக வித்தியாசமான கதை. காதலுக்கு தோற்றம்தான் முதல் துருப்புச்சீட்டு. அதுஇல்லாமல் ஒருகாதல் கதை இத்தனை விறுவிறுப்பாக சொன்னது பலரையும் வியக்க வைத்தது. அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் ஜனாதிபதி விருதையே சிறந்த இயக்கத்துக்காகப் பெற்றது.
காதலுக்கு மரியாதை: மூன்று அண்ணன்களுக்கு செல்லமான தங்கை ஷாலினி. அந்தப்பக்கம் நல்ல புரிதலோடு வாழும் பெற்றோரின் ஒரே மகன் விஜய். இருவருக்கும் காதல். மெல்லிய மொட்டாக அரும்பி, நன்றாக மணம் வீசுகின்றது. இரண்டு வீட்டாரும் நெருங்க முடியாத வகையில் கசப்பான சம்பவங்கள் அரங்கேற பெற்றோர்களுக்காகக் காதலையே காதலர்கள் தியாகம் செய்கின்றனர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாய் மிக இயல்பாய் பெற்றோர்களே காதலர்களை சேர்த்து வைக்க சுபம். இளையராஜாவின் இசை, பாசிலின் இயக்கம் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.
அலைபாயுதே: மில்லேனிய யுகத்தின் தொடக்கத்தில் வந்த நவீன காதல் கதை. படம் தொடங்கியதிலிருந்தே காதலின் புதிய புதிய பரிணாமங்கள். மாதவன், ஷாலினியின் சந்திப்பு, காதல், கல்யாணம், பிரச்னைகள் என படம் முழுக்கவே ஜெட் வேகம். ஏ.ஆர்.ரஹ்மானின் உலகத்தரமான இசை. ரசிகர்களை அவர்களின் மன ஓட்டங்களை ரொம்பவே பிரதிபலிக்கச் செய்த படம். காதலர்கள் தனியாக சென்று தனிக்குடித்தனம் போகும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளை கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது.