மீளுவோம்....! பாரம்பரியத்துக்கு மீண்டும் வருவோம்...!

எல்லாவகை உணவுகளையும் பார்த்து விட்டு நோயாளியாகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழையசோறும் நீராகாரமுமே சிறந்தது என உணர்ந்தோம்

Update: 2023-04-01 07:45 GMT

பைல் படம் 

எல்லாவகை உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்து விட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே உத்தமம் என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம். எல்லாவகை சொகுகளிலும் வாழ்க்கை பயணித்து விட்டு இறுதியில் நிறைய  தொலைவுக்கு   நடப்பது தான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்து கொண்டோம்.

எல்லா வகை செருப்புகளையும் அணிந்து பார்த்து விட்டு இறுதியில் வெறுங்காலோடு நடப்பதே சுரப்பிகளை ஊக்குவது என்று கண்டுபிடித்திருக்கிறோம். எல்லாவகை வாகனங்களை வாங்கி ஓட்டிப் பார்த்து விட்டு இறுதியில் சைக்கிள் தான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்து கொண்டோம்.

எல்லாவகை செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்து விட்டு இறுதியில் இலைதழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே விளை நிலத்துக்கு உரமூட்டும் என்று அறிந்து கொண்டோம். எல்லாவகை அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியவே முடியாது என்பதில் திண்ணமாய் உள்ளோம். இப்படி நிறையவே சொல்லலாம்.

இதில் இன்னும் ஒண்ணே ஒண்ணு மிச்சம். அது நடக்குமா என்று தெரியவில்லை. எல்லாவகை மாடமாளிகைகளையும், ஆடம்பரக் கட்டடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும் மரங்களையும் விளை நிலங்களையும் ஆற்றையும் காற்றையும் வரம்பின்றி அழித்த நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்தது போல் தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் தாம் சிறப்பு என்ற இடத்திற்கும் அதில் வசிப்பதற்கும் வந்தேயாக வேண்டும். நடக்குமா ? எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும் காலம் நம்மை புரட்டிப் போடும்.

பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு.வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம். நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சோற்றுக்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... நமது பாரம்பரிய உணவு வகைகள் பலவும் இருக்கின்றன. அதில்  பழைய சோறு நன்மை குறித்து பார்க்கலாம். இதை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவது நல்லதல்ல. மாறாக, மீதியுள்ள சோற்றில் நல்ல நீரை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைத் தேவையான அளவு நறுக்கிப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அச்சோற்றை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வெங்காயத்தையும் இடையிடையே மென்று சாப்பிட்டால்  அதுதான் அற்புத உணவாகிறது.

இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு. இரவு முழுக்க நீருடன் சோறு ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.

சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய சோறு நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது. காலையில் இதைச் சாப்பிடுவதால்,  வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

இதை மிகப்பெரிய கோடீஸ்வரரான சோகோ -மென் பொருள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது காலை உணவு பழைய சோறுதான் என பதிவிட்டு டிரெண்டிங் ஆனார். நம்முன்னோர்கள் சாப்பிட்ட இந்த உணவை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம்.

Tags:    

Similar News