கருணாநிதி இருந்திருந்தால் என்ன என்ன செய்திருப்பார்

முதல்வராக கருணாநிதி இருந்திருந்தால் இது போன்ற சூழலில் என்ன செய்திருப்பார், செய்திருக்க மாட்டார் என்பதை பார்ப்போம்

Update: 2023-06-16 09:30 GMT

பைல் படம்

முதல்வராக கருணாநிதி இருந்திருந்தால் இது போன்ற சூழலில் என்ன செய்திருப்பார், செய்திருக்க மாட்டார் என்பதை பார்ப்போம்.

1) முதலில் ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரை தன் கட்சியில் சேர்ந்த இரண்டாவது நாளே மாவட்டச் செயலாளர் ஆக்கி இருக்க மாட்டார். வெயிட்டிங் லிஸ்டில் போட்டு - "பிரசார அணி செயலாளர்"- "மாணவர் அணி அமைப்பாளர்"- என்று எதையோ ஒரு நமுத்துப் போன பதவியைக் கொடுத்து PROBATION PERIOD மாதிரி வைத்திருப்பார்!

2) சாதி  வாக்கு பலம், அகில இந்திய அளவில் தொடர்புகள், அல்லது பரம்பரையாகவே பணக்காரர் இப்படி ஏதாவது இருந்தால் மட்டுமே கட்சி மாறி வந்தவர்களை அருகிலேயே அண்ட விடுவார் - அடுத்த தேர்தலில் சீட் கொடுப்பார். மேற்கண்டதில் எதுவும் இல்லாவிட்டால் - "இளவலை இதய சிம்மாசனத்தில் ஏற்றி அழகு பார்க்கிறேன்!"- என்று சொல்லி விட்டுப் போய்க்கொண்டே இருப்பார்.

3) அதிலும் தனது கட்சி வேட்பாளரையே, அதுவும் தனது மாவட்டச் செயலாளரையே, 2006 தேர்தலின் போது வென்றால் நிச்சயம் அமைச்சர் என்ற நிலையில் இருந்த வாசுகி முருகேசனையே - திமுக வரலாற்றில் ஒரே பெண் மாவட்டச் செயலாளர் - தோற்கடித்த ஒருவரை... அதுவும் கரூர் போன்று முக்கியமான மாவட்டத்துக்கு - அதுவும் கட்சியில் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில்... நோ சான்ஸ்!

4) கருணாநிதியிடம் இருந்த இன்னொரு குணம் மாற்றுக் கட்சியில் இருந்தபடி தன்னையும் கட்சியையும் திட்டியவர் என்ன தான் மனம் மாறியோ, குணம் மாறியோ, பணம் மாறியோ திமுகவுக்கு வந்தாலும் - வரும்போது வாய் ஜாலகமாக வரவேற்பார். பிறகு திண்ணையில் உட்கார வைத்து தான் சோறு போடுவார்.

5) "கரூர் சின்னச்சாமி, ஈரோடு முத்துசாமி, திருப்பூர் கோவிந்தசாமி என்று எல்லா 'சாமி' களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள்!"- என்று வக்கணையாகப் பேசுவார். பிறகு சிறிது காலம் கழித்து அந்த "உற்சவ வாகனங்களின்" பயன்பாடு முடிந்ததும் கணக்காக வாகன அறையில் வைத்துப் பூட்டி விடுவார்.

6) திமுகவில் மேயப்போய் பசுமையான மேய்ச்சல் நிலம் அகப்படாமல் மேட்டாங் காட்டை முகர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பிய அரசியல் ஆடுகள் ஏராளம்! காளிமுத்து, வலம்புரி ஜான், க.சுப்பு என்று நிறைய உதாரணங்கள் உண்டு!

நான் அறிந்த வரையில் நாஞ்சில் மனோகரன் ஒருவரைத்தான் - அவரது அணுக்கமான ஆதரவாளர் என்பதால் சுப்புலட்சுமியையும் - அவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்த போது தன்னை என்னதான் வசைபாடினாலும் திமுகவுக்கு வந்த பிறகு(ம்) கருணாநிதி பதவி கொடுத்து அழகு பார்த்தார்.

அதுவும் கூட நாஞ்சில் மனோகரனுக்கு 1962 ல் அவர் தென் சென்னை MP ஆனதில் தொடங்கி 1980 களின் பிற்பகுதி வரை டெல்லி அரசியலில் அவருக்கு பல்வேறு கட்சியினரிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்த தொடர்புகளின் காரணமாகத்தான்.பிறகு 1989 முதல் வி.பி.சிங் அரசில் பங்கெடுத்த நாளிலிருந்து முரசொலி மாறன் சீனியராக வந்து விட்டதால் நாஞ்சிலாரை ஏதோ பெருங்காய டப்பா மாதிரி வைத்துக் கொண்டிருந்தார்.

7) மற்றபடி நாத்திகம் ராமசாமி, குடந்தை ராமலிங்கம், கே.விநாயகம் போன்ற மிகப் பிரபலமான காங்கிரஸ்காரர்கள் திமுகவில் இணைந்த போதும் அவர்களுக்கு திண்ணையில் அமரவைத்து "பொட்டல சோறு" மரியாதைதான் கருணாநிதி தருவார்.

8) கருணாநிதி எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார். தனது கட்சிக்கு உள்ளும் வெளியிலும் "ப்ரோட்டோ கால்" என்பதை சரியாகக் கடைபிடிப்பார். அது மீறப்பட்டால் கடுமையாக எச்சரிப்பார். திமுக கட்சி அமைப்பு - சேலம் வடக்கு மாவட்டம், சேலம் தெற்கு மாவட்டம் என்று இருந்ததாக நினைவு. அதாவது இன்றைய நாமக்கல் மாவட்டப் பகுதிகள் கட்சி அமைப்பில் அன்றைய சேலம் தெற்கு மாவட்டம் - அதற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.வீரப்பன். சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம். கருணாநிதி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கார் திருச்செங்கோட்டைக் கடந்து சங்ககிரி எல்லைக்குள் நுழைகிறது. அதுவரை கருணாநிதியின் காருக்குப் பின்னே இரண்டாவதாக வந்து கொண்டிருந்த கே.கே.வீரப்பனின் கார் காண்வாயில் இருந்து விலக்கப் பட்டு பின்வரிசைக்கு செல்கிறது. சங்ககிரி (சேலம் மாவட்டம்) வந்தவுடன் வீரபாண்டி ஆறுமுகத்தின் கார் கருணாநிதியின் காருக்கு அருகே இரண்டாவது இடத்துக்கு வருகிறது.

நாமக்கல் மாவட்ட எல்லை கடக்கும் வரை பின் தொடர வேண்டியது கே.கே.வீரப்பன்! சேலம் மாவட்ட எல்லை தொட்டவுடன் பின் தொடர வேண்டியவர் வீரபாண்டி ஆறுமுகம்! இந்த ப்ரோட்டோகாலை இருவருமே மீற முடியாது!

9) ஆனால் இன்று? ஐந்து கட்சி மாறி வந்தவருக்கு இத்தனை முக்கியத்துவம்! கட்சித் தலைவருடன் இவ்வளவு நெருக்கம்! திமுக பல தேர்தல்களில் தோற்ற காலங்களிலும் கூடவே இருந்தவர்களை மீறி இப்படி ஒரு முக்கியத்துவத்தை கருணாநிதி எவருக்கும் தரவே மாட்டார்!

அதுவும் சேகர் பாபு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், ராஜ கண்ணப்பன், ரகுபதி, ஈரோடு முத்துசாமி, அப்பாவு... இப்படி ஒட்டு மொத்தமாக கட்சி மாறி வந்த ஒரு பெரும் கூட்டத்துக்கே இந்த அளவு ஒரே காபினெட்டில் கருணாநிதி முக்கியத்துவம் தந்திருக்க மாட்டார் - ஒரிஜினல் திமுகவினரை மீறி!

10) எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதியிடம் இருந்த குணம் முக்கியமானது. எதையாவது எசகு பிசகாக கட்சிக்காரன் செய்யக் கூடும். அரசியலில் சகஜம்! ஆனால் அதை சாமர்த்தியமாக செய்யத் தெரியாமல் சொதப்பிவிடும் முட்டாளைக் கிட்டவே சேர்க்க மாட்டார்! கிளை விட்டுக் கிளை தாவும் போது பிடியை நழுவ விடும் குரங்கை மற்ற குரங்குகள் பிறகு தங்கள் கூட்டத்தில் சேர்க்காது!

11) மருத்துவ மனையில் அனுமதி - நெஞ்சு வலி - பேசவே முடியவில்லை அவரால் - என்று ஒரு மந்திரி சொல்ல... படுக்கையில் ஜம் என்று அமர்ந்தபடி அளவளாவும் காட்சி வெளிவருவதை கருணாநிதி செய்திருக்கவே மாட்டார்! ஒன்று அந்த மந்திரியைக் குதறி எடுத்திருப்பார் - தான் முன்னதாக மருத்துவமனைக்குப் போய் அளவளாவி இருந்தால் - அதன் பிறகு மந்திரி சொதப்பி இருந்தால்! அல்லது போய் மருத்துவமனையில் சந்திக்காமல் தவிர்த்து இருப்பார் - மந்திரி முன்னதாகப் போய் பார்த்து இப்படி ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தால்!

எல்லாவற்றையும் விட BEST OPTION இவ்வளவு BAD PUBLICITY க்கு ஆளாகி, தலைமை செயலகத்திலேயே ரெய்டு வரும் அளவுக்கு "அஜாக்கிரதையாக" நடந்து கொண்ட ஒருவரை, அதற்குப் பிறகு திடீர் நெஞ்சுவலி வந்த ஒருவரை, மருத்துவமனைக்கே போய்ப் பார்க்கும் ராஜதந்திர சறுக்கலை கருணாநிதி செய்யவே மாட்டார்! சிக்கல் வரும் வரை நீயும் நானும் - சிக்கல் வந்துவிட்டால் நீ மட்டும் - இது கருணாநிதி கடைபிடித்த யுக்தி! நீ என்ன கொள்கைக் கடலில் முத்தெடுக்கவா வந்திருக்கிறாய்? நான் என்ன உன் தாய் மாமனா, நீ முத்துக்குளிக்கும் போது முழுகிப்போனால் கயிற்றைப் பிடித்து மேலே இழுப்பதற்கு?

சாமர்த்தியமிருந்தால் நீந்தி வா - இல்லாவிட்டால் கடலோடு போ என்று கருணாநிதி சாமர்த்தியமாகக் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் வேலையில் - DAMAGE CONTROL EXCERCISE- இறங்கி இருப்பார்! எல்லாவற்றையும் விட...

"வாஜ்பாய் பாரசீகத்திலும் ஹிந்தியிலும் கவிதைகளை எடுத்தியம்ப, நான் புறநானூற்றை விளக்க இருவரும் இலக்கிய இன்பத்தில் திளைத்தோம்"- என்று ஒரு முறை சொன்னாரே அது போல... "குஜராத்து அன்னை ஈன்ற மகன் -'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கலியன் பூங்குன்றனாரின் கன்னித் தமிழை ஐ.நா மன்றத்தில் முழங்குகிறான் உடன் பிறப்பே! சற்றொப்ப அதே நேரத்தில் நானும் அதையே சிந்தித்தேன்! சிலிர்த்தேன் உடன்பிறப்பே!"- என்று முரசொலியில் கடிதம் எழுதிவிட்டு டெல்லி ஃப்ளைட்டை பிடித்திருப்பார் கருணாநிதி!

Tags:    

Similar News