கூடலுார் நகராட்சியை மாநகராட்சிக்கு இணையாக மாற்றுவேன்: தலைவர் வேட்பாளர் உறுதி
கூடலுார் நகராட்சியை தொழில் நுட்பம், கல்வி, வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு வசதிகளில் மாநகராட்சிகளுக்கு இணையாக மாற்றுவேன்
கூடலுார் நகராட்சி 16வது வார்டு அதிமுக வேட்பாளர் பா.லோகநாயகி. ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு தயாராகி வரும் இவரை அதிமுக சார்பில் கூடலுார் நகராட்சி தலைவர் வேட்பாளராக களம் இறக்கி உள்ளது.
இன்று லோகநாயகி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். அவர் கூறியதாவது: கூடலுார் நகராட்சியாக இருந்தாலும், முழுக்க முழுக்க கிராம வடிவமைப்பிலேயே இருக்கிறது. விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் இல்லை. இங்கு விவசாயம் சார்ந்த, விவசாய விளைபொருட்களை பதனிடும் தொழிற்சாலைகளை அமைத்தாலே பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் கூடலுார் மாணவர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அதேபோல் கூடலுார் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதவோ, இதர அரசு போட்டி தேர்வுகள் எழுதவோ மதுரை, திருச்சி, கோவை, சென்னை என செல்ல வேண்டி உள்ளது. அங்கு கிடைக்கும் கல்வித்தரத்தையும், தொழில்நுட்பங்களையும் என நகராட்சி மக்களுக்கு கொண்டு வந்து கொடுப்பேன். அதாவது கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்நுட்பம், வாழ்க்கை தரம் போன்ற விஷயங்களில் மாநகராட்சிகளுக்கு இணையாக கூடலுார் நகராட்சியை மாற்றுவேன். வீடு தோறும் தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொதுமக்களுக்க பூங்கா, விளையாட்டு திடல், கல்வி கற்றல் மையங்கள், உயர் கல்வி படிக்க வசதிகள், உதவிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அத்தனை அரசு உதவிகளும் பெற்றுத்தர தனி அலுவலகம் அமைத்தல்.
சுகாதாரத்தில் மேம்பாடு செய்தல், சுத்தமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்தல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், கழிவுகளை உரமாக மாற்றி மறுசுழற்சி செய்தல், ஆவின் கொள்முதல் நிலையம், விற்பனை நிலையம் அமைத்தல், உள்ளாட்சி பணிகளை முதல் தரத்தில் செய்து கொடுத்தல், சான்றுகளை தடையின்றி மக்கள் பெற நடவடிக்கை எடுத்தல், லஞ்சம், கமிஷன் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என (இன்னும் பட்டியல் நீ.....ண்டு கொண்டே செல்கிறது) பல திட்டங்களை எனது 16வது வார்டில் மட்டுமின்றி, நகராட்சி முழுவதும் செய்து தருவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார். பா.லோகநாயகியின் இந்த வாக்குறுதிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.