ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க.எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீடு, மது ஆலை, நட்சத்திர ஓட்டல், மருத்துவ கல்லூரி உட்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அவர் தொடர்புடைய நட்சத்திர ஓட்டல், மதுபான ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததால், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.
இந்த சூழலில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார் ஆய்வு மையம் அலுவலகம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, கிண்டி கலைமகள் நகர் பாளையக்காரன் தெருவில் உள்ள நியூடெல்டா நிறுவன அலுவலகம், அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடன் அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலகத்தில், சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 12 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை, அதேபோல, காலை 6 மணிக்குபணிக்கு வந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அடையாள அட்டையை பரிசோதித்து, செவிலியர்களையும், மருத்துவ மாணவர்களையும் அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
புதுச்சேரி அண்ணா நகரில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஒரு வீட்டிலும் சோதனை நடந்து, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் மற்றும் இளையனூர்வேலூரில் உள்ள மதுபான ஆலைகள், இந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களை அனுப்பி வைக்கும் குப்பன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல, சென்னையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வீடு, வண்டலூரில் உள்ள தாகூர் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கொளப்பாக்கத்தில் உள்ள பாலாஜி பாலிடெக்னிக், மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதி என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சோதனை இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகு, முழு விவரங்களும் வெளியிடப்படும்’’ என்றனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இவையே தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகள்.
இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத் துறை வெளிப்படைத் தன்மையோடும், நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்து விடுகிறது. சட்டத்தையும், மக்களாட்சியையும் துச்சமாக மதித்து செயல்படுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவது நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து உண்மையான பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.