கபசுரக்குடிநீர் குடிப்பதால் காய்ச்சல் வராது என்பது தவறு

மார்க்கெட்டில் போலி சூரணங்கள் அதிகளவில் விற்பனை ஆகின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது;

Update: 2023-11-13 01:00 GMT

பைல் படம்

தமிழகம் முழுவதும் இன்று உருவாகி உள்ள மிகப்பெரிய பிரச்னை போலி மருந்துகள் விற்பனை தான். தற்போது காய்ச்சல் வைரஸ் பரவலை கபசுரகுடிநீர் சூரணம் தடுக்கும் எனக்கூறி பலர் போலியான சூரணங்களை விற்பனை செய்கின்றனர். இதனை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் என சித்த மருத்துவர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பருவகால காய்ச்சல் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுக்க காய்ச்சல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் போலியான மருந்து விளம்பரங்களை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். அப்படிப்பட்ட விளம்பரங்களில் ஒன்று தான் கபசுரகுடிநீர் குடித்தால், காய்ச்சல் வராது என்பது. இது மிகவும் தவறான தகவல். கபசுரகுடிநீர் என்பது மருந்து. இது காய்ச்சல் வந்த பின் அதன் தீவிரத்தை குறைக்க டாக்டர்களின் அறிவுரைப்படி பயன்படுத்தலாமே தவிர இதனை முன்கூட்டியே குடிப்பதால் காய்ச்சல் வைரஸ் தொற்றை தவிர்க்க உதவாது என சித்த மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

உத்தமபாளையத்தை சேர்ந்த சித்த மருத்துவர்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் நாஙகிமக பணியில் இருக்கும் போது எங்களை வந்து சந்திக்கும் நோயாளிகளுக்கும், போனில் தொடர்பு கொள்ளும் நண்பர்களுக்கும் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். வெளியில் வந்து விட்டு வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை கால்களை நன்கு கழுவிய பின்னர், முடிந்தால் குளித்த பின்னர் வீட்டிற்குள் செல்லுங்கள் என அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் பலரும் கேட்கும் முக்கிய கேள்வி ‛கபசுரகுடிநீர் குடித்தால் காய்ச்சல் வருவதை தடுக்குமாமே’ என்பது தான். இந்த கேள்வியே தவறு. கபசுரகுடிநீர் குடிப்பதால் காய்ச்சல் வராது என்பது மிக, மிக தவறான தகவல்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அம்மை வந்தவர்களின் வீட்டு வாசலில் வேப்பிலை சொருகி வைப்பார்கள். அம்மை வந்தவர்கள் இந்த வீட்டில் இருக்கின்றனர். யாரும் உள்ளே வராதீர்கள். வந்தால் உங்களுக்கும் பரவி விடும் என்பதை எச்சரிக்கும் விதமாகவே இப்படி வேப்பிலை சொருகி வைப்பார்கள். இப்போது வைரஸ் தொற்று பாதித்தவர்களின் வீட்டில் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுகின்றனர். ஆக அந்த காலம் முதல் இந்த காலம் வரை வைரஸ் தொற்றை தவிர்க்க தனித்திருத்தலும், விலகியிருத்தலும் மட்டுமே மருத்துவத்தின் முதல் படியாக இருந்து வருகிறது.

அம்மை வந்தவர்களுக்கும், அவர் வசிக்கும் வீட்டிலும் அப்போது வேப்பிலை மஞ்சள் நீர் கலந்து தெளித்து கிருமிகளை சுத்தம் செய்தனர். இப்போது கிருமி நாசினி தெளிக்கின்றனர். வைரஸ் கிருமி பரவலை தடுப்பதற்காக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மை நோய் பரவிய ஊரில் அம்மன் கோயிலுக்கு காப்பு கட்டி விழா நடத்துவார்கள். காப்பு கட்டிய காலம் முதல் விழா முடியும் காலம் வரை ஊரில் இருப்பவர்கள் ஊர் எல்லையை தாண்டி செல்லக்கூடாது. வெளியூர்காரர்களும் அந்த ஊருக்குள் வரக்கூடாது.

இதே நடைமுறை தான் தற்போது ஊரடங்கு என்ற முறையிலும், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் முறை மூலமும், மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்படும் நடைமுறைகள் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. அம்மனுக்கு விழா எடுக்க காப்பு கட்டிய ஊர்களில் ‛மாஸ் கிளீனிங்’ என்ற முறை மூலம் ஊர் முழுக்க சுத்தப்படுத்தப்படும். இதன் மூலம் கிருமி தொற்றுக்கள் அந்த கிராமத்தில் முற்றிலும் அழிக்கப்படும். குறிப்பிட்ட சில நாட்கள் அசைவ உணவுகளை நிறுத்தி விடுவார்கள். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். தற்போது மக்கள் தேவையற்ற உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகளை, சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என அறிவுறுத்தப்டுகின்றனர்.

அம்மை நோயின் தீவிரத்தை குறைக்க பானகம் குடிப்பார்கள். வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் இப்போது வரை இவைகள் தான் அம்மை நோய்க்கு மருந்து என ஒருபோதும் யாரும் கூறியதில்லை. பானகமும், மஞ்சள், வேப்பிலை கலந்த குடிநீரும் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் அற்புதமான திரவ உணவுகள் ஆகும். இது தான் கபசுரக்குடிநீருக்கும் பொருந்தும். இதனையும் மீறி நோய் தொற்றினால் அதன் குறிகுணங்களுக்கு ஏற்பவே சிகிச்சை அளிக்கப்படும். வைரஸ் நோய்க்கு என எந்த சிகிச்சை முறையும் இதுவரை கண்டறியப்படவில்லை.  பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தென்படும் உபாதைகளுக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

காய்ச்சல் வைரஸ் பாதித்தவர்களுக்கு தென்படும் இருமல், சளி, நுரையீரல் தொற்று போன்ற குறிகுணங்களை கபசுரக்குடிநீர் குடிப்பதன் மூலம் குறைக்கலாம் என்று தான் சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கபசுரக்குடிநீர் குடிப்பதால் காய்ச்சல் நோய் தொற்று வராது என எந்த சித்த மருத்துவர்களும் கூறவில்லை. கபசுரக்குடிநீரும் ஒரு மருந்து என்பதை மறந்து விடக்கூடாது. இதனை டாக்டர்களின் ஆலோசனைப்படி தேவைப்படுபவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும். பலர் அறியாமையால் ‛எதனை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற மனநிலையில் இருக்கின்றனர்.

இது போன்றவர்களை பயன்படுத்தி சிலர் கபசுரக்குடிநீர் சூரணங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். சிலர் போலியான கபசுரகுடிநீர் சூரணங்களை தயாரித்து விற்கின்றனர். இதனால் தேவையற்ற பக்கவிளைவுகள் உருவாகும் ஆபத்துக்களும் உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு மக்களுக்கு எந்த மாதிரி நடைமுறைகளை வழிகாட்டுகிறதோ அதன்படி மட்டுமே செயல்பட வேண்டும். போலியான குடிநீர் சூரணங்களை வாங்கி குடித்து தேவையற்ற சிக்கலை இழுத்துக்கொண்டால் தற்போதய நிலையில் அதற்கு சிகிச்சை அளிப்பதே சிரமம் ஆகி விடும். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News