யானைக்கும் அடி சறுக்கும் என்பது சரிதான்
தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு தான் பகிர்ந்த அரிசிக்கொம்பன் குறித்த தவறான பதிவை உடனடியாக நீக்கினார்;
தற்போது அரிசிக்கொம்பன் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உலா வருகிறார். இந்நிலையில் தமிழக வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு யானை பசுமைப்புல்வெளிகளுக்கு மத்தியில் குழந்தை போல் துாங்கும் வீடியோ இருந்தது. இதனை பகிர்ந்த சுப்ரியா சாகு, அரிசிக்கொம்பன் யானை வனப்பகுதியில் பச்சைப்பசேல் புல்வெளியில் குழந்தையை போல் உறங்குகிறான் என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ அடுத்த சில நொடிகளில் தமிழகம், கேரளா முழுக்க பரவியது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்த யானை அரிசிக் கொம்பன் இல்லை. இந்த வீடியோ ஏற்கனவே கடந்த மாதம் வெளியான வீடியோ தான் என பதிலுக்கு பதிவிட்டிருந்தனர். உடனே சுப்ரியா சாகு தனது பதிவை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தார். சமூக வலைளத்தில் வெளியான கருத்துகளே சரி. இந்த வீடியோ ஒரு மாதம் பழைய வீடியோ. படுத்து துாங்குவது அரிசிக்கொம்பனும் இல்லை என தெரியவந்தது. உடனே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து இந்த பதிவை நீக்கி விட்டார்.
இருப்பினும் சமூக ஆர்வலர்கள் யானைக்கும் அடி சறுக்கும் என்பது சரியாகத்தான் உள்ளது. எது எப்படியோ சுப்ரியா சாகு பகிர்ந்தது மிகவும் ரம்மியமான அழகியல் சூழல் நிறைந்த ஒரு அற்புதமான வீடியோ பதிவு. இது தவறாக இருந்தாலும், பரவாயில்லை. அருமையான வீடியோ பகிர்ந்த அவருக்கு நன்றி. அவரது சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்து வருகின்றனர்.