இரு துருவங்களாக பிரிந்து நிற்கிறதா தமிழக பாஜக

தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற வித்தை தனக்கு மட்டுமே தெரியும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.

Update: 2023-04-02 13:00 GMT

பாஜக தலைவர் அண்ணாமலை (பைல் படம்)

தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று தனக்கு மட்டுமே தெரியும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.

ஆனால், அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்கக்கூடாது. அதிமுகவை நம்பியிருக்கக் கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதிர்த்த இந்தக் கருத்துகள் பாஜகவுக்குள் ஒரு வாரத்தைக் கடந்தும் அனலெனத் தகித்துக் கொண்டிருக்கிறது!

அதிமுக இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இல்லை என்கிற முடிவில் தமிழக மற்றும் டெல்லி பாஜகவினர் உறுதியாக இருக்கிறார்கள். இருந்தும், அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்கிற அளவுக்கு அண்ணாமலை சென்றதற்கு காரணம் என்னவென்று கேட்டால் தனது தலைமைப் பண்பின் மீது அவருக்கு இருக்கும் அசாத்திய நம்பிக்கைதான் என்கிறார்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தன்னை ஒரு தனிப்பெரும் ஆளுமையாக அண்ணாமலை கருதுகிறார். அதற்கேற்ப கட்சியில் ஒற்றைத் தலைமையாக தன்னை முன்னிலைப்படுத்தி வளர்த்துக் கொண்டுள்ளார். தமிழக பாஜக மட்டுமல்லாது தமிழகத்தில் பாஜக கூட்டணியும் தான் சொன்னபடி கேட்கும் நிலைக்கு வர வேண்டும் என்பது அண்ணாமலையின் அடிப்படை விருப்பமாய் இருக்கிறது.

அதற்காகவே பாஜக தலைமையிலான கூட்டணி என்பதை அண்ணாமலை விரும்புகிறார். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்பட தான் விரும்பும் அனைத்துத் தரப்பையும் கூட்டணியில் இணைத்து கூட்டணிக்கு தலைமை வகிக்க விரும்புகிறார் அண்ணாமலை. அதற்காக சில பல கணக்குகளையும் கையில் வைத்திருக்கிறார்.

2014 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக தவிர 3-வது அணியாக பாஜக கூட்டணி களமிறங்கியது. அப்போது தனக்காக 7 தொகுதிகளை மட்டும் வைத்துக்கொண்ட பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எஞ்சிய தொகுதிகளை பிரித்துக் கொடுத்தது. அப்போது சேலத்தில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டும் வெற்றி பெற்றனர். பாஜக அணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இப்போதும் அதேபோல் தங்களுடன் இணக்கமாக உள்ள கட்சிகளை வைத்து மூன்றாவது அணியை கட்டமைக்கலாம் என அண்ணாமலை கணக்குப் போடுகிறார். அதே 18 சதவீதம் ஓட்டு வாங்கினால் போதும். அடித்துப் பிடித்து 5 சீட் வெற்றி பெற்று விடலாம். அப்படியே இந்த கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தல் வரை நீட்டித்தால் அப்போது அதிமுகவை விட அதிகமாக ஓட்டு வாங்கி விடலாம் என்பதுதான் அண்ணாமலையின் திட்டம் என்கிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜகவை வார்த்துக் காட்ட முடியும் என மேலிடத்  தலைவர்களுக்கு உத்தரவாதம் அளித்தாராம் அண்ணாமலை.

இதற்கு டெல்லி தலைமை எந்த ரியாக்சனும் காட்டாத நிலையில் தான், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, தனித்துப் போட்டி என்று தன்னிச்சையாக பேசியிருக்கிறார் அண்ணாமலை. அப்படி பேசியதற்கு தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் இருந்து கடுமையான எதிர் வினைகள் வந்திருக்கின்றன. இதையடுத்தே, தனக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார் அண்ணாமலை.

இதற்கிடையே, தமிழகத்தில் தங்கள் முதுகில் ஏறி பயணிக்க விரும்பும் பாஜக, கூட்டணியில் உள்ள இதர, சிறிய கட்சிகளைப் போலவே தங்களையும் கையாள நினைக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமியும் புரிந்து கொண்டி ருக்கிறார். பாஜகவுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக இருக்கும் அவரும் எகிறி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை சேர்த்தே ஆக வேண்டும் என்று அண்ணாமலை சொல்வதையும் கொஞ்சம்கூட விரும்பாத எடப்பாடி, அண்ணாமலை இருக்கும் வரை இதை வலியுறுத்துவார் என்பதால் அண்ணாமலையின் தலைமையை மாற்ற வேண்டும் என்று தன் பங்கிற்கு போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இதுதான் தற்போதைய பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் என்கிறார்கள்.

இதனால் தம்பிதுரையை டெல்லிக்கு அனுப்பி மோடியை சந்திக்க வைத்த எடப்பாடி பழனிசாமி, எப்போதும் தங்களது ஆதரவு பாஜகவுக்குத் தான் என்பதை அவரிடம் நேரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதேநேரத்தில், அண்ணாமலை தான் தோன்றித்தனமாகப் பேசிவருவதை அதிமுக ரசிக்கவில்லை என்பதையும் மோடிக்கு தம்பிதுரை மூலமாக அவர் புரிய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அண்ணாமலையின் தன்னிலை விளக்கப் பேட்டியில் விரக்தியும் இருந்தது; வீராப்பும் இருந்தது. தனது கருத்தை தமிழக பாஜகவினர் மட்டுமின்றி டெல்லி மேலிடமும் ஏற்கவில்லை என்கிற விரக்தி அவரிடம் தெரிந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீராப்புடன் பேசிய அவர், ”எனது கருத்துகள் தலைமைக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்- என்ற அவரது வார்த்தைகள் மோடியையும், அமித்ஷாவையும் சேலஞ்ச் செய்யும் விதமாக இருந்தது. அண்ணாமலையின் இந்தக் கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருப்பதால் தமிழக பாஜக தற்போது இரு துருவங்களாக பிரிந்து நிற்கிறது. தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

அண்ணாமலையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற நிலைப்பாட்டில் கரு.நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டவர்கள் நிற்கிறார்கள். இவர்களில், வானதி சீனிவாசன் அண்ணாமலையுடன் ஏற்கெனவே தனக்கு இருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக மாநில விவகாரங்களில் தலையிடுவதே இல்லையாம். என்றாலும் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

கூட்டணியை முடிவு செய்யும் தேசிய கமிட்டியில் அவர் இருப்பதால், அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவே அவர் விரும்புகிறார். மூத்த தலைவர்கள் பலரும் அதிமுக கூட்டணி வேண்டும் என்றுதான் தலைமையிடம் எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் மத்திய உளவுத் துறையும், அமைப்புப் பொதுச் செயலாளரான கேசவவிநாயகனும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நீண்ட அறிக்கையாக அனுப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் பிறகும் அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிப்பது அத்தனை சுலபமல்ல என்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டு தான் அவரும் சில விஷயங்களில் எல்லைக் கோடு தாண்டுகிறார். இப்போதைக்கு அதிமுக இல்லாமல் தமிழ் நாட்டில் தேர்தலை சந்திக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கும் டெல்லி பாஜக தலைமை, அதிமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் அண்ணாமலையை தலைவராக வைத்துக் கொண்டு எப்படி கூட்டணி பேசும் என்கிறார்கள்.

ஏற்கெனவே பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழக பாஜக தலைவர்கள் பலரும் அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு அறிக்கை வாசித்திருக்கிறார்கள். இப்போது அதிமுகவும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இதற்கு மேல் அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிப்பது சாத்தியமில்லை என்று பாஜகவுக்குள்ளேயே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்திருக்கிறது பாஜக தலைமை. அன்றைய தினம் அவர் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கொடுத்துள்ளனர். அது சமயம் அண்ணாமலைக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப் படலாம். தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஒருவேளை, அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களில் சிலர் இப்போதே அவருக்கு தூபம் போடுகிறார்கள். ஆனால், அண்ணாமலை காலத்தில் தமிழக பாஜக தனித்துவத்துடன் வளர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் அண்ணாமலை. அப்படி இருக்கும் போது அவரை அத்தனை எளிதில் பதவியை விட்டு தூக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டத்தில் இருக்கிறது.

இதுகுறித்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசனிடம் பேசினோம். “தமிழக பாஜகவுக்குள் எந்த வித சலசலப்பும் இல்லை; கருத்து வேறுபாடும் இல்லை, வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம். கட்சி மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறது.

தலைவரை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படிச் செய்வது எங்களுடைய கட்சியில் வழக்கமில்லை. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூன்று வருடங்கள் தொடர்வார். அதன் பிறகு தலைமை விரும்பினால் மேலும் 3 வருடங்கள் தொடர முடியும். அவ்வளவுதான். இதற்கிடையில் அவரை மாற்றுவது என்பதற்கான பேச்சு எதுவும் எழவில்லை. முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

அதிமுகவோடு கூட்டணி தொடர்கிறது. தொடர்வதால்தான் கூட்டணி வேண்டாம் என்று தலைவர் சொல்கிறார். அவர் கட்சிக்குள் பேசிய விஷயங்கள் அவருடைய மனப்பான்மை சார்ந்தது. அவருக்குச் சரியெனப் பட்டதை அவர் சொல்லி இருக்கிறார். தமிழக பாஜக கூட்டணி இல்லாமல், யாருடைய கையையும் பிடித்துக் கொண்டு செல்லாமல், தனியாக நடக்க முடியும் என்று அவர் நம்புகிறார். அதைச் சொல்லி இருக்கிறார். அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதை ஏற்பதும்  நிராகரிப்பதும் தேசிய தலைமையின் கையில் இருக்கிறது அவ்வளவுதானே தவிர வேறெந்த பிரச்னையும்; குழப்பமும் இங்கில்லை” என்றார் அவர்.

பாஜகவை சொந்தக் காலில் நிற்கவைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார் அண்ணாமலை. அதனால் தான் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். ஆனால், அதிமுக தயவில்லாமல் தங்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கும் பாஜகவின் தலைவர்கள் அண்ணாமலையின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். அண்ணாமலை கட்சியின் வளர்ச்சியைப் பார்க்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். டெல்லி தலைமை எந்தப் பக்கம் சாய்கிறதென்று பார்க்கலாம்.

இதனிடையே, தற்போது மத்திய அமைச்சர் எல். முருகன் அதிமுக கூட்டணி தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு அண்ணாமலை எதிர்வினையாற்றியிருப்பது. அதிமுக கூட்டணி தொடர்பான விவகாரம் சூடு பிடித்திருக்கிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

Similar News