மரங்களை பாதுகாக்க ஆர்வமா? இந்தாங்க... ரூ.5 ஆயிரம் பிடிங்க...

தேனி மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடிப்பவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.;

Update: 2022-03-24 10:00 GMT

தேனி மாவட்ட தன்னார்வலர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

தேனியில் பனை நடவு, ஆணி பிடுங்கும் திருவிழா என்ற தன்னார்வலர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் தேனி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி, மரங்களை பாதுகாத்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என அத்தனை பேரின் ஆதரவும் இவர்களுக்கு இருந்து வருகிறது.


இந்த அமைப்பினர் மரங்களை பாதுகாக்கும் விதமாக இன்று ஒரு புதிய புரட்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: அந்த அறிவிப்பின் அடிப்படையில் மரங்களில் ஆணி அடித்து யாராவது விளம்பரம் செய்தாலோ, அல்லது வேறு தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலோ அவர்களை பற்றி தகவல் தரலாம். புகார் தரலாம். அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நோக்கத்தில் மட்டுமே இந்த பரிசு அறிவிக்கப்படுகிறது.

ஒரு நபர் எத்தனை காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம். முதல் புகார் கொடுத்து மனு ஏற்புச் சான்றிதழ் பெற்றவுடன் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கும் போது, 2-வது புகாருக்கான பரிசை தன்னார்வர் குழு முடிவு செய்து அளிக்கும்.

புகார் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வழக்குப்பதிவு செய்த பின்னர் பரிசுத் தொகை ரூ.5,000 வழங்கப்படும்.

புகார் கொடுக்கும் மனிதநேயர்கள் புகார் நகல், மனு ஏற்புச் சான்று நகல் அல்லது வழக்குப்பதிவு விவரங்களை thenivolunteers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரே காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் புகார்கள் கொடுத்தால் முதல் 10 நபர்களுக்கு ரொக்கப்பரிசு, மற்றவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

காவல் துறையோ, வருவாய்த்துறை போன்ற இதர துறையினர் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது வழக்கு அல்லது அபராத நடவடிக்கை எடுத்தால் பரிசுத் தொகை ரூ.5,000 தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தன்னார்வலர்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்து அப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், விளையாட்டு மைதானம் பராமரித்தல் போன்ற பணிகளை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு தன்னார்வலர்கள் குழு சார்பில் மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News