போலீஸ் நினைத்தால்..! நீதிமன்ற கதவை தட்டாமலேயே உதவி..!
போலீஸ் நினைத்தால் நீதிமன்ற கதவை தட்டாமலேயே உதவி செய்ய முடியும் என்பதற்கான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது;
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஒரு முதியவரின் துயரத்தை அறிந்து அந்த முதியவரின் வீட்டில் வாடகை தராமல் ஏமாற்றி வந்த மூன்று பேரை தி.நகர் துணை ஆணையரிடம் விசாரிக்க சொல்லி உரிய உதவி அந்த முதியவருக்கு பெற்று தரும்படி கூற, அவரும் விசாரித்து அந்த மூன்று நபர்களை வீட்டை காலி செய்யும்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் பிரச்னை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லும்படி காவல்துறை கூறும். முதியவர் விஷயத்தில் நீதிமன்ற கதவை தட்டாமல் காவல் துறையே நீதியை கையில் எடுத்துக் கொண்டு முதியவருக்கு உதவி செய்தது. காவல் துறை நினைத்தால் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றம் செல்லாமல் செய்ய முடியும் என்பதையே இதை காட்டுகிறது.
இந்த முதியவர் மட்டுமல்ல இவர் போன்ற வீட்டு உரிமையாளர்கள் பலருக்கு இப்பிரச்னை உள்ளது. எப்படியாவது கூழை கும்பிடுபோட்டு ஒரு வீட்டிலோ அல்லது கடையிலோ நுழைந்து விட்டு காலி செய்ய சொல்லும் போது அடாவடி செயலில் ஈடுபட்டு பின்னர் ஒரு தொகை பேசி பெற்றுக் கொண்டு செல்பவர்கள் ஏராளம்.
இதுபோன்று பாதிக்கப்பட்ட உரிமையாளர் காவல் நிலையத்தில் உதவி கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்று துரத்திவிடும். பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் காவல்துறை ஆணையர் செய்த உதவி போல் கிடைக்குமா????? காவல்துறை நினைத்தால் எப்பேர்ப்பட்ட உதவியும் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் நடந்துள்ளது.