இது அரிசிக் கொம்பன் யானையின் கதை...
இரண்டு நாட்களாக ஒட்டு மொத்த கேரளாவும் தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால் உறைந்து கிடந்தது.
கேரளாவில் உள்ள அத்தனை நியூஸ் சேனல்களும் சின்னக்கானல் வனப்பகுதியில், வனத்துறையால் பிடிக்கப்படவிருக்கும் அரிசிக்கொம்பன் யானையை சுற்றியே தன்னுடைய கேமராக்களை சுழல விட்டிருந்தது. மாநிலம் முழுவதும் ஒரு இனம் புரியாத பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கேரள தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தனை அலுவலகங்களும், தொலைக்காட்சி பெட்டிகளுக்கு முன்னால் உறைந்து கிடந்தன. உச்சக்கட்டமாக சின்னக்கானல் பஞ்சாயத்தில் உள்ள ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது வார்டுகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
Munar Divisional forest officer ரமேஷ் பிஷ்னோய் மற்றும் Munnar Assistant Conservator of forest ஷாந்த்ரி டோம் உள்ளிட்டவர்கள் தலைமையிலான வனத்துறை படை ஒன்றும் சின்னக்கானலில் முகாமிட்டிருந்தது. சாந்தம்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜு வர்கீஸ் மற்றும் சின்னக்காரர் பஞ்சாயத்து தலைவர் ஸினிபேபி ஆகியோர் ஸ்பீக்கர்கள் கட்டிய வண்டிகளில் பஞ்சாயத்து மக்களை உஷாராக இருக்க சொன்னது கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியது. இத்தனை பரபரப்புக்கும் காரணம்... அரிசிக் கொம்பன்.
இந்த ஒற்றை யானை உடும்பஞ்சோலை தாலுகாவில் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பஞ்சாயத்துகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தி வந்த கடும் தாக்குதல்களில் பத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதோடு, 60 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டிருந்தது.
அரிசியின் மீதும் சீனியின் மீதும் தீரா காதல் கொண்ட இந்த கொம்பன், ஒரு கட்டத்தில் ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் இருப்பதை உள்வாங்கியது. ரேஷன் கடைகளை உடைத்தால் அரிசியும் சீனியும் சாப்பிடலாம் என்று அதனுடைய புத்திக்கு எப்படி உரைத்ததோ தெரியவில்லை, ரேஷன் கடைகளை தேடித் தேடி உடைக்க ஆரம்பித்தது.
ரேஷன் கடைகளில் அரிசி இல்லை என்றால் அருகாமையில் இருக்கும் வீடுகளை உடைக்க ஆரம்பித்தது. ஒரு வீட்டில் அரிசி இல்லை என்றால் அதற்கு அடுத்த வீட்டையும் கொம்பன் பதம் பார்க்க ஆரம்பித்தான்.அரிசியை விரும்பி உண்டதால் அவருக்கு பெயர் அரிசி கொம்பன் என்று வந்தது. மலையாளிகள் அரிசியை அரி என்று மட்டுமே அரைகுறையாக உச்சரிப்பதால், அரிசிக்கொம்பன் அரிக்கொம்பனானான்.
மிகப்பெரிய சூறையாடலில் ஈடுபட்டிருந்த அரிசி கொம்பனை வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற குரல்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்து வந்த நிலையில், இப்போது தான் அதற்கு விடிவு கிடைத்திருக்கிறது. கடைசியாக வனத்துறையை சேர்ந்த தமிழரான வாட்சர் சக்திவேலுவை, அரிசிக்கொம்பன் மிதித்து கொன்றதும் தான் யானையின் மீதான கோபப்பார்வை அனைவருக்கும் வந்தது. நான்கு பெண் மக்களை பெற்ற சக்திவேலுவின் அகோர மரணம் இடுக்கி மாவட்டத்தையே உலுக்கியது.
அதற்குப் பிறகுதான் கேரள வனத்துறை அமைச்சரான ஏ.கே.சசீந்திரன் களத்திற்கு வந்தார். இடையில் கேரள மாநில உயர் நீதிமன்றம் அரிசி கொம்பனை பிடிப்பதற்கு சில தடங்கல்களை விதித்ததால் பிடிப்பதில் தாமதமானது. பின்னர் சரியான காரணங்களை பட்டியலிட்ட கேரள வனத்துறை, ரமேஷ் பிஷ்னோய் தலைமையில் வலுவான படையை அமைத்தது.
28 ஆம் தேதி காலை நான்கு மணிக்கு தொடங்கிய அரிசி கொம்பனை பிடிக்கும் ஆப்ரேஷன், மறுநாள் மதியம் வரை நீடித்தது. ஒரு வழியாக அரிசி கொம்பன் யானை கேரள வனத்துறையிடம் சிக்கினான்.
சின்னக்கானலிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரபாண்டியன் மெட்டில் தான் வனத்துறை தன்னுடைய முதல் பணியை ஆரம்பித்தது. அங்கிருந்து மெல்ல மெல்ல அரிசி கொம்பனை சின்னக்கானல் பாலம் அருகே கொண்டு வந்த வனத்துறையினர் நான்கு கும்கி யானைகளை வைத்து அரிசி கொம்பன் யானையை துாக்கினர்.
மயங்கிய நிலையிலும் வனத்துறை ஊழியர்களை பதம் பார்க்கத் துணிந்த அரிசிக்கொம்பன் ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு லாரியில் ஏற்றப்பட்டான். மாலை ஐந்து முப்பது மணிக்கு சின்னகானலில் இருந்து லாரியில் பயணமான அரிசிக்கொம்பனுடன் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றது.
லாரியில் அதிகாரிகள் புடைசூழ பயணமான அரிசிகொம்பனை, பூப்பாறை, சாந்தம்பாறை, சேரியாறு, நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டமேடு, குமுளி வரை பெருந்திரளான மக்கள் கூட்டம் நின்று பார்த்தது.ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்ட அரிசிக்கொம்பன், சரியாக 10.15 மணிக்கு குமுளி வந்தடைந்தான். குமுளி வந்தடைந்த கொம்பனுக்கு ஆதிவாசி பிரிவை சேர்ந்த மன்னான் சமூகம் சிறப்பு பூஜை செய்து வரவேற்பு அளித்தது.பெரியார் புலிகள் காப்பகத்தினுள், குமுளியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டகானம் வனப்பகுதியில் தற்போது அரிசி கொம்பன் யானை உலா வருகிறது.
வழக்கம்போல் கேரள நாட்டில் அரிசி கொம்பனை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் சம அளவில் கிளம்பி இருக்கிறது. சின்னக்காணல் வனப்பகுதியில் யானைகளுக்கு உணவில்லாத நிலையிலேயே அவை ரேஷன் கடையை சூறையாடுவதாக சிலர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அரிசி கொம்பன் அதனுடைய வாழ்விடத்தில் வாழ்ந்து வந்ததாகவும் பெரிய அளவிலான மனித குடியேற்றம் தான் அரிசி கொம்பனை மூர்க்கமடைய வைத்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
அரிசி கொம்பனுடைய அட்டகாசம் ஆரம்பித்தது 2000 க்கு பிறகு தான். 2000 வரை பெரிய அளவிலான யானை அட்டகாசம் சின்னக்கானல் சாந்தம்பாறை பகுதிகளில் இருந்தது இல்லை. அதற்குப் பிறகு சின்ன கானல் சாந்தம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட பெரிய அளவில் மலையாள குடியேற்றம் தான், அரிசி கொம்பனின் இந்த மூர்க்கத்திற்கு காரணம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கடும் குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார்.
அரிசி கொம்பனால் குத்தி கிழிக்கப்பட்ட வாட்ச்சர் சக்திவேலின் உடலை பார்த்து அவர் பெத்துவிட்ட நான்கு பெண் மக்கள் கதறிய கதறலை, கேரள மீடியாக்கள் நேரலையாக ஒளிபரப்பியிருந்தால் இந்த வாதத்தை மலையாளிகள் எழுப்பி இருக்க மாட்டார்கள் என்றும் அவர் புகார் எழுப்பி உள்ளார்.
எப்படியோ காலம் கடந்த முடிவு தான். ஆனாலும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் குடிசைகளில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள். பூப்பாறை, ஆனையிரங்கல் வழியாக சூரியநெல்லி விலக்கு வரை எந்தக் கவலையும் இன்றி தமிழ் மக்கள் நடமாடலாம். அதுபோல போடி மெட்டு சிங்கு கண்டம் வழியாக சூரியநல்லி வரை எந்தவித பயமும் இன்றி தமிழ் மக்கள் நடமாடலாம். சாந்தம்பாறை பஞ்சாயத்திலும் இதே நிலைதான்.