ரூபாய் 5000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் ! உண்மை என்ன? நியாயம் எது ?

அரசு ஊழியர்களை இழிவுபடுத்துவது ஆட்சியாளர்களின் இயல்பு, இதைத் துடைத்தெறிந்து உண்மையை ஊருக்கு சொல்வது அரசு ஊழியர்களின் கடமை

Update: 2023-04-01 06:45 GMT

பைல் படம்

அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்போடு அளித்த ஆதரவே   தி.மு.க அரசு தேர்ந்தெடுக்கப்பட காரணமாக  இருந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்த பின்னர் அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இது பற்றி அரசு ஊழியர் ஒருவர் இப்படி ஒரு பதிவினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இது பற்றி பார்ப்போம்..முதலில் ஒரு குட்டிக் கதை..

ஒரு ஊருல ரெண்டு பேரு 10 மாசத்துக்கு முன்னாடி 1000 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தாங்களாம். ஒவ்வொரு மாசமும் அவுங்க முதலாளி பத்துப்பத்து ரூபாயா சம்பளத்த கூட்டியதால கடைசியா 1100 ரூபா சம்பளம் வாங்குனாங்களாம். அப்போனு பார்த்து அந்த முதலாளி செத்துப் போயிட்டாராம். அப்பறம் அந்த இடத்துக்கு வேறொருத்தர் புது முதலாளியா வந்தாராம்.

அடுத்த மாசமே வேல செஞ்ச ரெண்டு பேருல ஒருத்தர் வேலை இருந்து நின்னுட்டாராம். அவருக்குப் பதிலா 10 ரூவா தினக்கூலிக்கு இன்னொருத்தர வேலைக்கு போட்டாராம் அந்த புது முதலாளி.

இதப் பார்த்த அதி புத்திசாலி கணக்கப்புள்ள வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டு 1100 ரூபா எங்க? 10 ரூபா எங்க? இவ்ளோ வித்தியாசம் வரலாமா. . அய்யய்யோ இது நீதியா? நியாயமா? -னு லபோ திபோனு கூச்சல் போட்டு தினக்கூலியா வந்தவரை வேலைய விட்டு துரத்திப்புட்டு... 15 ரூவா சம்பளம் தர்றேன் நீயே யாரையாச்சும் வேலைக்கு வச்சுக்கோ அப்படீனு ஒரு கங்காணிக்கிட்ட பொறுப்ப ஒப்படச்சுட்டு... பார்த்திங்களா நான் எப்புடி நீதிய காப்பாத்துனேன் -னு பெருமிதப்பட்டாராம்.

இப்ப சொல்லுங்க.  முதலாளி, புது முதலாளி & கணக்கப்புள்ள இந்த 3 பேருல யாரு நீதிய காத்தது? நியாயஞ் செஞ்சது? மாசம் 10 ரூவா கூட்டுன முதலாளியா? 1000 ரூவா சம்பளம் தர வேண்டிய வேலைக்கு 10 ரூவா கூலி கொடுத்த புது முதலாளியா? 10 மாசம் வேல செஞ்வரோட சம்பளத்த தினக்கூலிக்கு இப்ப வந்தவரோட கூலியோட ஒப்பிட்டுப்பேசி, ஏதோ பெருசா தரப்போறதா நினச்சுக்கிட்டு கங்காணி கைல பொறுப்பக் கொடுத்த கணக்கப்புள்ளயா? தெளிவான ஒரு முடிவிற்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி ஒரு உரையைப் பார்ப்போம்..

TNPSC Group IV தேர்வு முறைகேடு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் அரசின் பணிகளில் தற்காலிகமாகப் பணியாற்றுவோர் 5000 - 1000 வாங்குவதாகவும், நிரந்தரப் பணியாளர் இலட்சம் ரூபாய் வாங்குவதாகவும், இது நியாயமில்லை என்றும், குறைந்தது EPF உள்ளிட்டவையாவது கிடைக்க வேண்டும் என்பதால் Outsourcing முறையில் ஆட்களை நியமிக்க அரசாணை வெளியிட்டதாகவும், ஆனால் இதுதான் சமூகநீதியா எனக்கேட்டு பலர் எதிர்ப்பதாகவும் கூறியிருந்த காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.(தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த Outsourcing முறையையும் எதிர்த்துத்தான் கடந்த 28.03.23 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கதையுடன் உரை முடிந்தது.

இனி சில கேள்விகள்..

அரசின் காலிப் பணியிடங்களுக்கு நிரந்தரமாகப் பணியாளர்களை நியமிக்காது Temporaryயாக நியமிப்பது அதுவும் தனியார் முகமைகள் மூலம் (Outsourcing Agencies) நியமிப்பது தான் சமூகநீதியா? தமிழ்நாடு அரசின் காலமுறை ஊதிய அடுக்கில் Pay Band 1A : Level 1 எனும் அடிமட்ட Permanent ஊழியருக்கான ஆரம்ப ஊதியம் ரூ.15,700/- உட்சபட்ச ஊதியம் அதாவது 45-வது ஊதிய உயர்வு நிலையில் ரூ.58,100/- இதில் யாருக்கு தமிழ்நாடு அரசு இலட்ச ரூபா கொடுக்குது?

Pay Band 2 : Level 11-ல் வரும் ஊழியர்களுக்கு 37-வது ஊதிய உயர்வு நிலையில் தான் முதன்முறையாக இலட்ச ரூவா சம்பளம் (ரூ.1,02,800/-) அனுமதிக்கப்படுகிறது. அதாவது Level 11-ல் குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியருக்குத் தான் இலட்ச ரூவா சம்பளம் தரப்படுகிறது எனும் நிலையில், ஒரு தற்காலிக ஊழியரை இந்த Level 11-ல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஊழியருடன் ஒப்பிடுவது எந்த நாட்டின் சட்டப்புத்தகத்தில் நீதியாக பார்க்கப்பட்டு, நியாயமில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது?

(அதென்ன Level? அரசின் ஒவ்வொரு பணிக்கும் SSLC Fail, SSLC Pass, +2 Fail, +2 Pass, Diploma, UG Degree, PG Degree, Doctorate. . . . என ஒரு குறிப்பிட்ட அடிப்படைக் கல்வித் தகுதி முக்கியம். கல்வித் தகுதி மற்றும் இன்னபிற பணி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 32 பணி நிலைகள் (Level) தமிழ்நாட்டின் அரசுப் பணியில் உள்ளன.

தற்காலிக ஊழியருக்கு Minimum level ஊதியமாவது தரவேண்டுமே! என்ற வருத்தம் மெய்யாகவே ஊழியர் நலனை முன்வைத்துத்தான் என்றால் எதற்காக Outsourcing Agencyகளை நாட வேண்டும்? அந்தத் தற்காலிக ஊழியரை பணி நிரந்தரம் செய்து அந்தப் பணி Levelற்கான ஆரம்ப ஊதியத்தை வழங்கலாமே.!..?

தனியார் நிறுவனங்களில் கொடுத்தால்தான் தொழிலாளர் நலச் சட்டத்தின் படி EPF எனப்படும் Employees Provident Fund கிடைக்கும், பணி ஓய்விற்குப் பின் Pension கிடைக்கும் என்பதெல்லாம் சரித்தான். அரசு ஊழியர்களுக்கு இவை எதுவுமற்ற CPS திட்டம் தான் நடைமுறையில் உள்ளது என்பதால், அவர்களையும் நிரந்தர அரசுப் பணியாளராக மாற்றினால் இவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று அவர்கள் மீது மட்டும் இரக்கம் காட்டுகிறாரோ?

தனியார் Outsourcing Agencyகளிடம் அளித்தால், ஊழியருக்கென கொடுக்கும் கொஞ்சக் காசிலும் ஒருபகுதியை அந்நிறுவனம் எடுத்துக்கொள்ளாதா? மேலும் இது கொத்தடிமை முறைக்கு வித்திடாதா? ஒருவர் அரசு வேலையை நாடுவதே பணிப்பாதுகாப்புடன் சுயமரியாதையோடே வாழத்தானே? தமிழ்நாட்டு மக்களுக்கான சுயமரியாதையை உறுதி செய்த அமைப்பின் நீட்சியாக அரசியல் பாதையை அமைத்துக் கொண்ட திமுக தனது ஆட்சியில், அஇஅதிமுக புகுத்திய Outsourcing Agency முறையைத் தானும் வழி மொழிவதும் வலிந்து செயல்படுத்த முனைவதும் தான் சுயமரியாதையா? இதில்தான் சமூகநீதி காக்கப்படப் போகிறதா?

இனி முடிவு !

அரசு ஊழியர்களை மக்களுக்கு எதிரானவர்களாக, அவர்களின் கோரிக்கைகளை அரசிற்குச் சுமையானதாகச் சித்தரித்து வந்த ஆட்சியாளர்களின் இயல்பு இன்று ஒருபடி கூடுதலாகச் சென்று, அரசு ஊழியர்களாகக் காத்துக்கிடக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவைச் சிதைக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடும் போரட்டங்கள் யாவுமே, அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே. அவ்வாறு நடந்த போராட்டங்களில் மீட்டெடுக்கப்பட்ட உரிமைகளையே இன்று அரசுப் பணியேற்றோர் துய்த்து வருகின்றனர். இனி இவர்கள் போராடாது போனால் நாளை அரசுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு எந்த உரிமையும் மிச்சமிருக்காது என்பதோடே அரசுப் பணி என்பதே எஞ்சியிருக்காது என்பதே இன்றைய எதார்த்தம்.

இனியும் ஆட்சியாளர்களின் இழிவு மொழிகளை வழிமொழிந்து, போராடும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தூற்றப் போகின்றீர்களா ? அல்லது. . நமது பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகின்றனர் என்று போராட்டங்களை வாழ்த்தப் போகின்றீர்களா?. முடிவு மக்களாகிய உங்கள்  மூளையில் ! என முடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News