விளைபொருட்கள் விலை வீழ்ச்சி: தாசில்தாரிடம் விவசாயிகள் முறையீடு

விவசாய விளை பொருட்களுக்கு தரமான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் தாசில்தாரை சந்தித்து முறையிட்டனர்.

Update: 2022-01-11 09:45 GMT

உத்தமபாளையம் தாசில்தாரிடம் மனு கொடுத்த விவசாயிகள்.

தேனி மாவட்ட பாரதீய கிஸான் சங்க தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, துணைத்தலைவர் கொடியரசன், கூடலுார் முல்லை சாரல் விவசாய சங்க செயலாளர் ஜெகன், பொருளாளர் ஜெயபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவனாண்டி, பாரதீய கிஷான் சங்க தேனி ஒன்றிய பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், 18ம் கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், விவசாயிகள் கோபால், ராஜா, வெங்கடேஷ், ரவி, தெய்வேந்திரன், ஜீவானந்தம், லுக்மான் உட்பட பலர் உத்தமபாளையம் தாசில்தாரை சந்தித்தனர்.

பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை, குடியரசுத் தலைவர்,  பிரதமர், தமிழக முதல்வர், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து இவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் விவசாய விளைபொருட்களின் விலைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்கவில்லை. விவசாயத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இந்த சிக்கலை தீர்க்க விளைபொருட்களுக்கு நிரந்தர விலை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை, தேனி, மதுரை மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியறுத்தி,  தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். தேனி கலெக்டர், தமிழக முதல்வர், மத்திய விவசாயத்துறை அமைச்சர், பாரத பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News