கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு குட்டு வைத்த எர்ணாகுளம் உயர் நீதிமன்றம்

ஒரு மாவட்ட ஆட்சியரை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருப்பது இதுதான் முதல் முறை.

Update: 2023-10-20 15:45 GMT

இடுக்கி கலெக்டர் ஷீபா.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்மஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் கடந்த சில ஆண்டுகளாக மலையாள குடியேற்றங்கள் தீவிரமடைந்திருந்தது. குறிப்பாக மூணாறு நகரத்தில் ஆற்றங்கரை ஓரமாக இரும்பு கம்பிகள் மூலம் ஒரு கடையை கட்ட வேண்டியது. தட்டிக் கேட்கும் பஞ்சாயத்து நிர்வாகத்தையும், அரசு அதிகாரிகளையும் நான் யார் தெரியுமா என்று மிரட்ட வேண்டியது. இந்த கதை தான் தொடர்ந்து கொண்டிருந்தது.

அதுபோலவே வானளாவிய ரிசார்ட்களை மலையோரங்களில் தொங்க விடுவது போன்று கட்டுவது, குறிப்பாக மூணாறில் இருந்து அடிமாலி செல்லும் சாலையில் மலை விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டடங்களை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

இது போன்ற அத்துமீறல்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக கேரள மாநில உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது. தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை ஆய்வு செய்த கேரள மாநில உயர்நீதிமன்றம், ஒரு கட்டத்தில் இடுக்கி மாவட்ட ஆட்சியரை நெருக்க, கடந்த 2006 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த நெருக்கடிக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அதனடிப்படையில் தேவிகுளம், பீர்மேடு, உடும்மஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் கட்டிடங்களை அடையாளங்காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நேற்று முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி இருக்கிறது.

2006 ஆம் ஆண்டு அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்ட இது போன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய அன்றைய இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் எம்.எம்.மணியால், இப்போது நேரடியாக களத்துக்கு வர முடியவில்லை.

ஆனால் அவர், இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் சி வி வர்க்கீசை வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். உயர் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாலும், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஒரு இரும்பு பெண்மணி என்பதாலும், எம் எம் மணியின் சதிதிட்டம் எதுவும் வேகவில்லை.

கேரள மாநில அரசு அரண்டு போய் கிடக்கிறது. காரணம் இடுக்கி மாவட்ட ஆட்சியரின் தொடர் நடவடிக்கைகள் அரசை ஆட்டம் காண செய்திருக்கிறது. ஒருபுறம் உடுமஞ்சோலை சட்டமன்ற உறுப்பினரான எம்.எம். மணியின் நெருக்கடி, மறுபுறம் இடுக்கி மாவட்ட ஆட்சியரின் நேர்மையான நடவடிக்கை, இறுதியாக கேரள மாநில உயர்நீதி மன்றத்தின் மன்றத்தின் நேரடிப்பார்வை என கலகலத்து கிடக்கிறது கேரள மாநில தலைமைச் செயலகம். ஒரு கட்டத்தில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபாவை கட்டுப்படுத்த முடியாமல், கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார் கேரள மாநில தலைமைச் செயலாளர் வேணு ஐ ஏ எஸ்.

தனக்கு கீழே பணி செய்யும் ஒரு மாவட்ட ஆட்சியரின் நேர்மையான நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மாநில தலைமைச் செயலாளர், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கை அபத்தத்திலும் அபத்தம்.

கேரள மாநில உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் வேணுவை எச்சரித்ததோடு மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் குட்டு வைத்தது. இடுக்கி மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் கே.கே.சிவராமன், ஆக்கிரமிப்புகளை எந்த நிலையிலும் எடுக்க வேண்டும் என்று களத்தில் நிற்கிறார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும், வணிக நிறுவனங்களை தொடக்கூடாது என்று களத்தில் நிற்கிறார் இடுக்கி மாவட்டத்தின் முன்னாள் சிபிஎம் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எம்.மணி. அவருக்கு பின் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் தற்போதைய இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் சி.வி.வர்க்கீஸ்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுத்து வரும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபாவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் வலுவான நடவடிக்கை எடுத்த கேரள உயர்நீதிமன்றத்தினை நாங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். அரசியல் நெடுக்கடியில் சிக்கி தவிக்கும், கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 140 ஆண்டுகளாக இடுக்கி மலையகத்தில் தங்கள் வாழ்வை தொலைத்து, நிற்கதியாய், நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் என் தமிழ்த்தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள், அந்த மண்ணுக்கு சித்திய ரத்தம் இன்னும் வீண் போகவில்லை. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பாளர்களும் வெளியேற்றப்பட வேண்டும்.

தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளை அட்டையாய் உறிஞ்சி கொழுத்துக்கிடக்கும் பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

சூரியநெல்லி, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் பூப்பாறை, சாந்தம்பாறை, மறையூர், வட்டவடை, கோவிலூர், கொட்டக்கம்பூர், ஆனச்சால், உள்ளிட்ட கிராமங்களில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதற்கு இடுக்கி மாவட்ட ஆட்சியர் சாட்டையை கடுமையாய் சுழற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News