புதிய தொழிலாளர் மசோதாவுக்கு ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது

Update: 2023-04-22 10:15 GMT

இது குறித்து TESTF பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் மற்றும் இணை பொதுச்செயலாளர், AIPTF, பொதுச்செயலாளர். WTTF, ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்ட திருத்திய மசோதாவினை விவாதத்திற்கு அனுமதிக்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி உள்ளது. இது அனைத்து தரப்புகளையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தொழிலாளர் சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அப்போது தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த எதிர்ப்பின் காரணமாக இன்று வரை மத்திய அரசால் தொழிலாளர் சட்ட மசோதாவை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு அறிவித்த அந்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குரல் கொடுத்தார். ஆனால் அந்த சட்ட மசோதாவில் இருந்த கருத்துகளை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலை சட்ட மசோதா திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதில் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்த அம்சங்கள் நெகிழ்வு படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொள்ளலாம் என்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்ற உரிமையை பெற்றுள்ள தொழிலாளர்கள், இந்த புதிய சட்ட மசோதாவின் மூலம் 12 மணி நேரம் வரை பணியாற்றக்கூடிய நிலை ஏற்படுகிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் ஏழு நாட்களுக்கு 32 மணி நேரம் அல்லது 35 மணி நேரம் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனை 30 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் இவைகளுக்கெல்லாம் மாற்றாக 48 மணி நேர வேலையை தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நெருக்கடியை தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட மசோதா ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நிறுவனம் தங்களது லாபத்திற்காக தொடர்ந்து இடைவேளை இல்லாமல் 48 மணி நேரம் வேலை வாங்கினால் தொழிலாளர்களுடைய உடல்நிலை, மனநிலை பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் 48 மணி நேர வேலையை நான்கு நாட்களுக்குள் முடித்தால் மீதமுள்ள மூன்று நாளில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என அரசு சமாதானம் சொல்கிறது.

தொடர் வேலை என்பதால் தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகும். மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத போக்கை மறைமுகமாக தமிழகத்தில் நிறைவேற்ற பார்ப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்லி அதே நேரத்தில் அதில் உள்ள சரத்துகளை இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் என்றெல்லாம் பெயர் மாற்றி தமிழகத்தில் அமல்படுத்தி கல்வித்துறையை கேள்விக்குறியாக்கியது போல், தற்போது தொழிலாளர் நலனையும் கேள்விக்குறியாக மாற்றிவிட்டது.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை. இதனை நிறைவேற்ற தமிழக அரசு தயங்குகிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கை காற்றில் பறக்க விடப்பட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மலிவான ஊதியத்தில் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து உழைப்பு சுரண்டலை அரசு மேற்கொள்கிறது.

இப்படி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் இந்த அரசு, தற்போது தொழிலாளர்கள் நலனிலும் கை வைத்துள்ளது. உலகமெங்கும் எட்டு மணி நேரம் வேலை என்று உறுதி செய்யப்பட்டதற்கு பின்னர், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 1923 இல் அக்குரல் எதிரொலித்தது. சிந்தனை சிற்பி சிங்காரவேலர் இந்த முழக்கத்தை கையில் எடுத்தார்.

இந்தியாவில் இக்குரல் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த நூற்றாண்டை பெருமையுடன் கொண்டாட தொழிலாளர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களின் குரல்வலையை நசுக்கும் இந்த புதிய சட்ட மசோதா அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. உடனடியாக தமிழக அரசு இந்த புதிய சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை மேற்கொள்ளும் நடைமுறையினை கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். கம்யூனிச கொள்கையின் மீது ஆதரவும் அக்கறையும் கொண்டுள்ள தலைவர் கலைஞர் வழிவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News