தடுப்பூசி போடாவிட்டால் தேனியில் பொது இடங்களில் அனுமதி இல்லை
தேனி மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
தேனி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட இதுவரை, 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்னும் பலர், முதல் டோஸ் தடுப்பூசியே போடாமல் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று பரவல் அபாயம் உருவாகி வருவதால், தேனி மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், பொது இடங்களில் நடமாட அனுமதி இல்லை. அவர்களை எங்கு பார்த்தாலும், தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இல்லாவிட்டால், உடனே அபராதம் விதிக்கப்படும் என, தேனி மாவட்ட நிர்வாகம் கிடுக்குப்பிடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.