பள்ளி மாணவர்களுக்கு பரவுது கொரோனா: முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் கொரோனா பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் கிட்டத்தட்ட சமூக பரவலை எட்டி விட்டது. சமூகத்தில் பெரும்பாலானோருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் மிக, மிக குறைந்த சதவீதம் பேரே தொற்று பரிசோதனை செய்து கொள்கின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்படாததால் பெரும்பாலும் தொற்று பரிசோதனைக்கு யாரும் தங்களை உட்படுத்த விரும்பவில்லை.
மழைக்காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் தொல்லை இருக்கத்தான் செய்யும் என பலரும் கருதுவதால் சோதனைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கொரோனா சமூக பரவலாக மாறி பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் பரவி வருகிறது. ஆண்டிபட்டியில் ஒரு அரசு பள்ளியில் 13 பேருக்கு ஒரே நேரத்தில் தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அங்கன்வாடி குழந்தைகளில் பெரும்பாலானோர் சளி, இருமல், லேசான காய்ச்சலுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முடிவுகளின் அடிப்படையில் 46 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்து இருந்தாலும், உண்மையில் பாதிப்பு பல மடங்கு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு யார் வந்தாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்டி உள்ளது.