கோ திங்க்கர்...கோ ரைட்டர்..! மனம் திறந்த மணிரத்னம்
நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு டைரக்டர் களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் என மணிரத்னத்தை ஒரே சொல்லில் குறிப்பிடலாம். ‘நாயகன்’, ‘அஞ்சலி’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என நேர்த்தியான சூப்பர் ஹிட் படங்கள் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
உலக அழகிகளுக்கு இவருடைய படத்தில் அறிமுகம் என்பது கடவுள் வரம் கொடுப்பது மாதிரி. ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல ஆளுமைகள் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள் என்பது 2 கே கிட்ஸ்களுக்கு ஆச்சர்ய தகவலாக இருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மகுடமாக தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் எடுக்கத் தயங்கிய, அப்படியே எடுத்தாலும் ஆரம்பத்திலேயே ‘ஸ்டாப்’ போர்டு காண்பித்து நிறுத்திய நிலையில் அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை பாக்ஸ் ஆபீசில் ஏற்படுத்திய நிலையில், இப்போது அப்படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் ஆனது. அவர் பொன்னியின் செல்வன் பற்றி மனம் திறந்ததை வாசர்களுக்கு தருகிறோம்.
பசுமை வழிச் சாலையில் மூங்கில் காடுகள் போல் உள்ள பகுதியில் இருக்கிறது மணிரத்னத்தின் ஆபீஸ். வராண்டா, மாடிப்படிகள் என எங்கெங்கும் மர வேலைப்பாடுகள். இரண்டாவது மாடியில் டிரன்ஸ்பேரன்ட் கண்ணாடி அறையில் சில மில்லிகிராம் எடையுள்ள ஆப்பிள் லேப்டாப்பில் மூழ்கியிருந்தவர் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் மணிரத்னம்.
சினிமா குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டதா?
எங்கள் குடும்பத்தைச் சுற்றி நிறைய சினிமா குடும்பங்கள் இருந்தாலும், நாங்கள் யாரும் சினிமாவுக்குள் வரவில்லை. அப்பா, வீனஸ் பிக்சர்ஸ் என்ற பெயரில் பட விநியோகம், படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தார். ஆனா, நானும் சரி, என் சகோதரர்களும் சரி மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டோம். எங்களுக்கு சினிமாவுக்குள் போவதற்கு அனுமதியே கிடையாது. படிப்பு தான் முக்கியமா இருந்துச்சு. விளையாடுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கலாம். ரெகுலர் மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரிதான் வளர்க்கப்பட்டோம்.
சினிமா எனக்குள் எப்படி பாதிப்பை உண்டாக்கியதுன்னு தெரியல. எனக்கு மட்டுமல்ல, என்னுடைய அண்ணன் ஜி.வி., தம்பி சீனிவாசன் உட்பட யாருக்கும் சினிமா இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. ஜி.வி. அண்ணா சிறந்த ஆடிட்டர். அவர் பிசினஸ் நோக்கத்துடன் தான் சினிமாவுக்குள் வந்தார். சினிமா என்னுடைய கரியரா அமையும்னு நான் எதிர்பார்க்கல. சராசரி இளைஞனாக படிப்பு முடிந்து வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அது நான் என்னுடைய கரியரை முடிவு செய்யும் நேரமாக இருந்தது.
எனக்கு நானே ஆறு மாசம் ‘கெடு’ வெச்சு வேற முயற்சி பண்ணலாம்னு கதை எழுத ஆரம்பிச்சேன். அப்படி ஆறு மாசம் எனக்கு நானே கெடு வைத்துக் கொண்டு தான் சினிமாவுக்கு வந்தேன்.இண்டிபெண்டன்ட் இயக்குநராக எப்படி படம் இயக்க முடிந்தது? அந்த சமயத்தில் எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அந்த மொழியில் படம் பண்ணியிருப்பேன். ஏன்னா, முதல் பட வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அப்படித்தான் கன்னடத்தில் படம் பண்ணினேன். ஒரு டிகிரி படிச்சேன். பிறகு போஸ்ட் கிராஜுவேஷன், அப்புறம் இரண்டு வருஷம் வேலைனு வருடங்கள் கடந்தது. அதன் பிறகும் ஆறேழு வருஷம் உதவி இயக்குநராக இருந்து படம் பண்ணுமளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.
நானே கதை எழுதி, அந்தக் கதையை கன்வின்ஸாக சொல்லி சினிமாவுக்கு வர முடிவு செய்தேன். கதை எழுதும்போது சீன் எப்படி பண்ணலாம்னு கான்ஃபிடன்ட் வந்துவிட்டா போதும். யார் வேண்டுமானாலும் டைரக்டராகலாம். நானும் பி.சிராமும் கதவைத் தட்டாத தயாரிப்பாளர் ஆபீஸே இல்லை. எந்தக் கதவு திறக்கும்னு தெரியாததால் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தோம்.
உங்கள் கதை மாந்தர்களை எந்த புள்ளியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறீர்கள்?
அனுபவத்திலிருந்தும் புத்தக வாசிப்பு மூலம் கிடைத்தவைகளில் இருந்தும் தான். இதிகாசங்களிலிருந்தும் ஒரு கேரக்டர் பிறக்கும். நம்மைப் பாதிக்கிற விஷயமும் வெளியே நடக்கிறது. அதை சினிமாவா கன்வெர்ட் பண்ணுகிறேன். ஒரு படைப்பு என்று வரும்போது அதில் நிழல், நிஜம் என எல்லாம் கலந்திருக்கும்.
எளிமையான கதை, புதுமுகங்கள்... என சிறியளவில் யோசிக்க முடியாதளவுக்கு ஒரு வட்டத்துக்குள் சிக்கியதாக நினைக்கிறீர்களா?
‘அலைபாயுதே’ பண்ணும் போது மாதவன் புதுமுகம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சின்னப் பெண்ணை மையமா வெச்சு எழுதப்பட்ட கதை. ‘கடல்’ பண்ணும்போது புதுமுகங்களை வைத்துதான் பண்ணினேன். ‘ஓ காதல் கண்மணி’ படமும் அப்படித்தான். முடிந்தவரை ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் ஜானரை மாற்றிக்கொள்வேன். கதைதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. சில கதைகளுக்கு புதுமுகம் ரொம்ப ஹெல்ப் பண்ணும்.
‘அலைபாயுதே’ மாதிரி கதைக்கு கண்டிப்பா புதுமுகம் இருப்பதுதான் பெட்டர். அந்தக் கதைக்கு இமேஜ் உள்ளவர் தேவைப்படமாட்டார். சில கதைகளுக்கு ஆக்டர் தேவைப்படுவாங்க. ‘அலைபாயுதே’ படத்திலேயே அரவிந்தசாமி, குஷ்பூ வருவாங்க. சின்ன போர்ஷன், அதேசமயம் முக்கியமான போர்ஷன். அதற்கு பாப்புலர் முகம் தேவைப்பட்டதால் அவர்கள் நடித்தார்கள். எல்லாவற்றுக்கும் கதைதான் முக்கியம்.
சினிமாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வரையறுக்க முடியாது. எல்லாவிதமான படமும் இருக்கிறது. ஹாலிவுட்ல ‘அவதார்’ மாதிரியான கிரா ஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள படம் வருகின்றது. சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களும் எடுக்கப்படுகின்றன. ‘சூப்பர்மேன்’ மாதிரியான படங்களும் உருவாகின்றன. எதுவும் நம்பும்படியா இருக்காது.
அப்படி நடக்கவும் நடக்காது. அதை ஒரு கதையாக எடுத்து கன்வின்சிங்கா பண்றது ஒருவிதம். அதேசமயம் ரியலிஸ்டிக்கா இருக்கக்கூடிய படமும் தேவைப்படுகிறது. சினிமாவில் எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது என வரையறை செய்யமுடியாது. நான் முதல் படம் பண்ணும்போது இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் ‘போய்யா’னு சொல்லியிருப்பேன்.
இளம் வயது என்பது அற்புதமான காலகட்டம். பாரதியாரின் கவிதைகள் இளமையில் வந்தது தான். அறிவியல், அரசியல் என பல தளங்களில் இளம் வயதில் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். பதின்பருவம் வந்ததும் அவர்களுக்குள் வாழ்க்கை பற்றிய புரிதல் வர ஆரம்பித்துவிடும். ஒரு படைப்பாளியா இன்னொரு படைப்பாளிக்கு நான் அறிவுரை சொல்லமாட்டேன். எது சரி, எது தவறு என்று அவர்களுக்குத் தெரியும். தவறு இருந்தால் விழும்போது கற்றுக்கொள்வார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கு வந்த விமர்சனங்களில் உங்களைக் கவர்ந்தது..?
‘பொன்னியின் செல்வன்’ நாவலை யாரெல்லாம் படிச்சாங்களோ அவங்க நாவலை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். நானும் படிச்சதால் அது என்னுடையதா நினைச்சேன். சினிமாவா வந்திருப்பது என்னுடைய ‘பொன்னியின் செல்வன்’. நான் ரசிச்ச விஷயங்கள், எதைக் கோர்வையா சினிமா மொழியில் சொல்ல முடியுமோ அதைக் கொண்டு வந்திருக்கிறேன். சில சமயம் பார்வையாளர்களின் பார்வை வித்தியாசப்படலாம்.
எனக்கு என்ன சந்தோஷம்னா எல்லாஆடியன்ஸும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நாவலின் தொடர்ச்சியாகப் பார்த்தது தான். ‘பொன்னியின் செல்வன் - 1’ பெரிய சந்தோஷம் என்றால் இரண்டாவது பாகம் அதையும் தாண்டி சந்தோஷத்தைத் தந்து இருக்கிறது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகச் சொல்கிறார்களே?
சினிமாவுல ஒரு கேரக்டரை உருவாக்கும்போது விஷுவல் கவனிக்க வைக்கும். ஆதித்ய கரிகாலனைக் காட்டணும்னா அவனைப் பற்றிச் சொல்வதைவிட கண்முன் காட்டினா எஃபெக்ட்டா இருக்கும். அதனால் அவனைப் பற்றிய புரிதலை ஆக்ஷனா கன்வெர்ட் பண்ணினேன். கதை சொல்ல எது தேவைப்பட்டதோ அதை மட்டும்தான் பண்ணியிருக்கிறேன். அமரர் கல்கி, அரசியல் விளையாட்டு, அட்வென்ச்சர்னு நிறைய எழுதியிருக்கிறார். அதை நான் வெகுவா ரசிச்சேன். அது சினிமாவுக்கென்று எழுதிய மாதிரியே இருந்துச்சு.
‘பொன்னியின் செல்வன் 2’ல டிராமாதான் முக்கியமா இருக்கும். கதை மாந்தர்களின் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்த நாவலின் பியூட்டியே யாரையும் நல்லவங்க, கெட்டவங்க என பிரிக்க முடியாது என்பதுதான். நெகடிவ்னு நினைக்கும் கேரக்டர் பாயிண்ட் ஆஃப் வியூவ்ல ஒரு நியாயத்தை அமரர் கல்கி கற்பித்திருப்பார்.
நந்தினி ஏன் அப்படி இருக்கிறார், பழுவேட்டரையர் ஏன் அப்படி இருக்கிறார் என்பதற்கு நியாயம் இருக்கும். அதுதான் கதையை ரசிக்கும்படியா மாத்தியிருக்கு. எல்லா கேரக்டருக்கும் மோட்டிவேஷன் இருக்கும். அவங்க சைட்ல இருந்து பார்த்தா அது கரெக்ட்டா தெரியும். அதைத்தான் இரண்டாவது பாகத்துல கொண்டு வந்திருக்கிறேன்.
சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கிறது என்கிறார்களே?
அமரர் கல்கி சொன்ன கதையை சுருக்கித்தான் சொல்ல முடியும். அதனால சில மாற்றங்கள் தேவைப்பட்டது. நாவலில் இல்லாதது சில இடம் பெற்று இருக்கும். நாவலில் இருப்பது சிலது இருக்காது. அந்த மாற்றங்கள் இருந்தால்தான் கோர்வையாகக் கொண்டுபோய் கதையை முடிக்க முடியும். எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கணும். அதனால் சினிமாவில் மாற்றம் இருக்கும். முதல் பாகத்தில் பாடல், நடனமாவது இருந்திருக்கும். 2ம் பாகத்தில் அதுகூட இருக்காது.
‘பொன்னியின் செல்வன்’ கடலுக்குள்ள போயிட்டார் என்பதுடன் படத்தின் முதல் பாகம் முடிந்திருக்கும். இது அதுக்கப்புறம் நடக்கும் கதை. இதுல நின்னு பாட்டு பாட முடியாது. பேக்ரவுண்ட்லதான் பாடல் வரும். ஸோ, இரண்டாம் பாகம் எமோஷனல் படம். பெரிய தியாகம், பொற்காலத்தின் பிறப்பு வரும். ஒரு படமாதான் யோசிச்சு, ஒருபடமாதான் ஷூட் பண்ணினேன். இரண்டு பாகம் என்றாலும் ஒரே முதுகுத்தண்டுதான்.
நடிகர், நடிகைகள் எத்தகைய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்?
சொல்றத மட்டும் செய்யணும்னு நான் எதிர்பார்க்கமாட்டேன். முதல் நாள் சந்திப்பிலேயே ஆர்ட்டிஸ்ட்களிடம் நான் சொன்னது, இந்த கேரக்டரை நீங்களும் நானும் சேர்ந்து தான் திரைக்கு கொண்டு போகணும்... உங்களை இன்வெஸ்ட் பண்ணுங்க என்றுதான். உங்களுடைய திங்க்கிங், பாடிலேங்வேஜ் எல்லாமே கேரக்டரா மாறியிருக்கணும்னு சொன்னேன்.
ராஜராஜ சோழன் மாதிரி வர்றீங்க என்றதும் ‘யெஸ் சார்’னு சொல்றதைவிட வீட்டுக்குப் போனாலும், வெளியில போனாலும் ராஜ ராஜ சோழன் மாதிரி நடந்துக்குங்க என்பேன். ஜென்டில்மேனா இருக்காதீங்க, ராஜா மாதிரி வாழுங்க என்றுதான் சொன்னேன்.
அந்தவிதத்துல ஆர்ட் டிஸ்ட்ஸும் நானும் சேர்ந்துதான் பயணித்தோம். என்னைப் பொறுத்தவரை ஆக்டர் என்பவர் கோ திங்க்கர், கோ ரைட்டர். நடிகர், நடிகைகள் கால்ஷீட் பிரச்னையால் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய சிச்சுவேஷன் வந்ததாகச் சொல்கிறார்களே?
பெரிய படம், நிறைய நடிகர், நடிகைகள்... இதெல்லாம் பிரச்னையே இல்லை. நடுவுல வந்த கோவிட்தான் பிரச்னை. முதல் ஷெட்யூல் முடிச்சுட்டு வந்தவுடன் லாக்டவுன் வந்துச்சு. அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை, ஆக்டர்ஸ் வெயிட் போடாமல் இருக்கணும் என்பதுதான். அதனால் அடிக்கடி ஃபோன் பண்ணி ஜிம் ஒர்க் அவுட் பண்றீங்களா, வீட்ல எதாவது வேலை செய்கிறீர்களா என்று விசாரிப்பேன்.
பெரும்பாலும் பெரிய பகுதிகளாக எடுத்ததால் கால்ஷீட் பிரச்னை வரவில்லை. சில இடங்களில் சிறியளவில் அட்ஜஸ்ட்மென்ட் இருந்துச்சு. என் படம் என்பதைவிட எல்லா ஆர்ட்டிஸ்ட்ஸும் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிப்பதில் ஆர்வமா இருந்தார்கள். படத்தில் ஒரு பார்ட்டா இருக்கணும்னு விரும்பி வந்தாங்க. பார்த்திபன் சாருக்கு சின்ன வேடம்தான். ஆனா, அவர் நான் பண்றேன்னு வந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான்...?
ரஹ்மான் எப்போதும் எனக்கு பெரிய பலம். இரண்டாவது பாகத்துல பின்னணி இசை மட்டும்தான் வரும்னு அவருக்குத் தெரியும். எவ்வளவு சிறப்பா பண்ண முடியுமோ அந்தளவுக்கு சிறப்பா பண்ணியிருக்கிறார். படமா பாக்கும்போது பேக்ரவுண்ட், சாங் இரண்டையும் சேர்த்து படத்தை அடுத்த லெவலுக்கு தூக்கி விட்டிருக்கிறார்.
ரவிவர்மன் பிரில்லியன்ட் கேமராமேன். திறமைசாலி. சின்சியர் பர்சன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல ரவி.கே.சந்திரனுக்காக ஒரு பாடலுக்கு ஒர்க் பண்ணினார். அப்போதிலிருந்து ‘டச்’ல இருக்கிறார். அவர் வளர்ச்சியை தொடர்ந்து கவனிக்கிறேன். அவருடைய படங்கள் பார்த்துவிட்டு பேசுவேன். உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கிறார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒர்க் எப்போதும் உயர்தரத்தில் இருக்கும். இவ்வாறு மணிரத்னம் கூறியுள்ளார்.