தொழிலதிபர்கள் ஓடுகின்றனர் என்ன நடக்கிறது கேரளாவில்...
ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலைகள், கேரளாவில் எத்தனை இருக்கிறது என்பது தான் பிரதானமான கேள்வி...
பாறசாலை முதல் காசர்கோடு வரை, பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் கேரளாவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏன் இல்லை என்கிற கேள்விக்கு கேரளத்து இடதுசாரிகளிடம் பதிலும் இல்லை.
அரபு நாடுகளில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படும் லூலூ மால் அதிபர் யூசுப் அலி, எத்தனையோ ஆண்டுகள் கழித்து இப்போது தான் கேரளாவில் கால் பதித்துள்ளார். ரியால்களிலும், தினார்களிலும் புரளும் யூசுப் அலி, தான் பிறந்த கேரளாவின் வளர்ச்சிக்கு கைகொடுக்காததற்கு காரணம், கேரளா முழுவதும் நிலவும் தொழிற்சங்க கெடுபிடிகள்.
ஏற்கனவே சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி, ஐ என் டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் படுத்தும் பாடு போதாதென்று, இப்போது பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் வலதுசாரி தொழிற்சங்கமும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது. கேரளாவில் உள்ள பெரிய நகரங்களில், நான்கைந்து லக்கேஜ்களோடு நீங்களும் உங்கள் நண்பர்களும் பேருந்து நிலையத்தில் இறங்கினால், உங்களிடமிருந்து உரிமையோடு இரண்டு மூன்று லக்கேஜ்களை தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் சிவப்புச் சட்டை அணிந்த தோழர்கள்.
விடயம் என்னவென்றால் உங்களோடு சேர்ந்து வரும் நான்கு பேரையும் அவர்கள் சட்டை செய்யவே மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் லக்கேஜ் மட்டும் தான். எதிர்த்து ஏதாவது நீங்கள் பேச நினைத்தால் நடப்பதே வேறு. இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான். கேரளாவில் மிகப் பெரிய தொழில்கள் என்றால், மர வேலைப்பாடுகளை செய்யும் நிறுவனங்கள், பிளைவுட் தொழிற்சாலைகள், மரம் சார்ந்த அனைத்து வகையான தொழில்கள், ரப்பர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை ரப்பர் சார்ந்த உற்பத்தி நிலையங்கள், பாரகன், வாக்கரூ போன்ற புகழ்பெற்ற செருப்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை தான் பிரதான தொழிற்சாலைகள்.
கொச்சியில் உள்ள ஒண்டர்லா, கொல்லம் மாவட்டம் புனலூரில் உள்ள பேப்பர் மில், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரிசி மில்கள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் உள்ள தேயிலை கம்பெனிகள், கேரள மாநிலம் முழுவதும் பரவிக் கிடக்கும் முந்திரி தொழிற்சாலைகள், மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் உள்ள தேக்குமர தொழிற்சாலைகள் என்பதைத் தாண்டி பூதக்கண்ணாடி போட்டு தேடினாலும் கேரள மாநிலத்தில் ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக் கூடிய எந்த தொழிற்சாலையும் இல்லை.
உலகில் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனமான கை டெக்ஸ் உரிமையாளர் பாபு ஜேக்கப்பின் குரல் மொழியில் சொல்வதானால்...‘கேரள மாநில அரசு கடைப்பிடிக்கும் தொழில் கொள்கைகள், அங்கு தொழில் செய்ய உகந்ததாக இல்லை’ என்பதாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆடை உற்பத்தியில், தன்னுடைய சொந்த மாநில மக்களுக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்த கை டெக்ஸ் நிறுவனம், சமீபத்தில் கேரள மாநிலத்தில் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 4 புதிய அலகுகளை உருவாக்க திட்டமிட்டிருந்தது.
ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய அலகுகளில், கேரள மாநில அரசின் தூண்டுதலின் பேரில் தொடர்ச்சியாக ஒன்பது முறை நடத்தப்பட்ட சோதனையில் எரிச்சலுற்ற சாபு ஜேக்கப், ஒட்டுமொத்தமாக தன்னுடைய கை டெக்ஸ் நிறுவனம், கேரள மாநிலத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நிமிடம், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், தனி ஜெட் விமானத்தை சாபு ஜேக்கப் விரும்பினால் அனுப்பி வைக்க தயார் என்று அதிரடி காட்டினார்.
ஆனால் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி ராஜீவும், முதல்வர் பினராயி விஜயனும்,கை டெக்ஸ் நிறுவன அதிபர் சாபு ஜேக்கப்பின் அறிவிப்பு குறித்து இதுவரை எவ்வித பதிலும் சொல்லவில்லை என்பதிலிருந்து அவர்களுடைய தொழில் கொள்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ரயில் பெட்டி உற்பத்தி நிலையத்தை பாலக்காடு மாவட்டத்தில் அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதன் அதிகாரிகள் நடத்திய முன்னேற்பாட்டு விசாரணையில், ரயில்பெட்டி தொழிற்சாலையை அங்கு தொடங்கினால், ஆண்டு முழுவதும் கதவடைப்பு நடத்துவார்கள் அங்குள்ள தொழிற்சங்கங்கள் என்கிற முடிவின் அடிப்படையில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
டெல்லியில் உள்ள ரயில் பவனத்தின் முன்பு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,தன் மாநில எம்.பி க்களுடன் மறியல் நடத்தியும்,, வேலை நடக்கவில்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் அமைக்கப்பட்டிருந்த கொக்கோகோலா நிறுவனத்தால்,அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் நஞ்சாவதாக கூறி எழுந்த போராட்டத்தின் அடிப்படையில், கோலா நிறுவனம் அங்கிருந்து விரட்டப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் தஞ்சமடைந்தது.
அதுபோல சமீபத்தில் அர்ஜுனா நேச்சுரல்ஸ் என்கிற 300 கோடி மதிப்பிலான ஆயுர்வேத கம்பெனியும், கேரள மாநில அரசின் தொழில் கொள்கைகளை சகிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி சென்னைக்கு வந்து விட்டது. இன்குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கம் உரிமை மறுக்கப்படும் போது எழுப்பப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சதா சர்வகாலமும் உணவுக்கு முன்னும் உணவுக்குப் பின்னும் கூட அதை எழுப்புவதில் என்ன ஆனந்தம் இவர்களுக்கு...கேரளாவில் இன்றைக்கிருக்கும் ஒரே ஒரு பாரம்பரியமான தொழிற்சாலை என்றால் அது நாயர் டீ கடைகள் மட்டும் தான்.
சென்னை நகரை சுற்றி நிரம்பிக் கிடக்கும் தொழிற்சாலைகளில், 5 விழுக்காடு கூட கேரள மாநிலம் முழுவதும் இல்லை. மூன்று பேருக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டால், தொழிலை வளப்படுத்துவதை விட, அந்த நிறுவனத்தின் வாசலில் தொழிற்சங்க கொடி ஏற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தேனியிலிருந்து போடி செல்லும் வழியில் கோடாங்கிபட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் அடிமாலியிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் தன்னுடைய ஆலையை துவங்கியது. தொழிற்சங்கங்களின் கைங்கரியத்தில் ஆலை இப்போது செயல்படுவது கோடாங்கிபட்டியில். லட்சக்கணக்கான பேர் வேலை செய்யும் தேயிலை கம்பெனிகளில் தொழிற்சங்கங்கள் என்ன செய்கிறது என்று பார்த்தால், ரொம்ப சிம்பிள்.கம்பெனி கொடுத்த வீட்டில் கவனமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பார்கள் தொழிற்சங்க தலைவர்கள்.
இன்றைக்கு கேரளாவில் இருந்து பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வாழ்பவர்களின் எண்ணிக்கை 6.1 மில்லியன். ஒரு சின்ன மாநிலத்தில் இந்த எண்ணிக்கை என்பது ஐந்தில் ஒரு மடங்கு. வேலைவாய்ப்பின்மையும், தொழில் சார்ந்து நகர முடியாத நிலையிலும் தான், மலையாளிகளை வெளிநாட்டுக்கு கூட்டங் கூட்டமாக அனுப்பியது. இதையெல்லாம் தாண்டி கேரளாவிற்கு இருக்கும் முதன்மை வருமானம் சுற்றுலா... சுற்றுலா மட்டும் இல்லையென்றால் கேரளாவின் ஒட்டுமொத்த வருமானத்தில் பாதி இல்லை. அதுபோல இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டி கொடுப்பதிலும் மலையாளிகள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.
இன்றைக்கு ஒரு தொழிற்சாலையை கேரளாவில் தொடங்க வேண்டுமானால், வாங்குவதற்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்வோம். பாறசாலை முதல் காசர்கோடு வரை, எர்ணாகுளம் முதல் தாளூர் வரை வாங்குவதற்கு எங்கினும் பட்டா நிலம் இல்லை. அதனால் தான் தமிழகத்தில் இருக்கும் காய்ந்து வறண்டு போன வனாந்திரங்களையும் வாங்கத் துடிக்கிறார்கள். நன்றி: ச.அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம்.