பெரியகுளம் அருகே டிஸ்சார்ஜ் ஆன அன்றே அண்ணனை பழிதீர்த்த தம்பி
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்லும் முன்பே, தனது அண்ணனை வெட்டி பழித்தீர்த்தார் அவரது உடன் பிறந்த தம்பி.;
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி பால்பண்ணை தெருவை சேர்ந்தவர்கள் வீரமுத்து, 47, பாண்டியராஜன், 40. அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடக்கும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமுத்து தனது தம்பியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் சில்வார்பட்டி வந்து இறங்கினார்.
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த தனது அண்ணன் வீரமுத்துவை பார்த்தார். உடனே தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து சராமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த வீரமுத்து நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்தார். தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவதானப்பட்டி போலீசார் பாண்டியராஜனை கைது செய்தனர்.