அண்ணாமலைக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பா.ஜ.க மேலிடம்...!

டில்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக வின் பலவீனங்களை பட்டியலிட்டுள்ளார்

Update: 2023-03-26 18:00 GMT

பைல் படம்

தமிழக பா.ஜ.., தலைவர் அண்ணாமலை மார்ச் 23-ம் தேதி டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார். அ.தி.மு.க., பா.ஜ.க, இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முக்கிய தலைவர்களை, அண்ணாமலை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுறது.

அண்ணாமலை அடிக்கடி டில்லி சென்று அமித்ஷா, நட்டா, சந்தோஷ் ஆகியோரை சந்தித்து கட்சி பணிகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசிப்பது வழக்கமான ஒன்று தான். கர்நாடகா சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் அதுபற்றியும் விவாதித்துள்ளார்.

இரு கட்சிகள் இடையே மோதல் துவங்கிய பின் மார்ச் 10-ம் தேதி கிருஷ்ணகிரி வந்த நட்டாவிடம் அண்ணாமலை ஒரு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அதன் பின் தான் 17-ம் தேதி நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், கூட்டணிக் காக சமரசம் செய்ய வேண்டிய நிலை வந்தால், தலைவர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்றார். இதனால் தமிழக பா.ஜ.க,வில் குழப்பமான சூழல் உருவானது. அதில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் தான் மேலிட தலைவர்களை அண்ணாமலை சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க  நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.வுடான பிரச்னைகள் குறித்து அமித்ஷா, நட்டா, சந்தோஷிடம் ஆகியோரிடம் அண்ணாமலை விரிவாக எடுத்து கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க. இப்போது இல்லை. அ.தி.மு.க. என்ற கட்சி உருவாகவும், அது 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யவும், தி.மு.க. எதிர்ப்பு தான் காரணம். அதனால் தான், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தி.மு.க வினரை பகையாளிகளாகவே கையாண்டனர்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க. என்பது இன்னொரு தி.மு.க.,வாகி விட்டது. தி.மு.க.,வின் கொள்கைகளை அ.தி.மு.க. பேசுகிறது. இதனால் வழக்கமாக கிடைத்து வந்த தேசிய சிந்தனையாளர்கள், திராவிடத்திற்கு எதிரானவர்களின் ஓட்டுகள் இனி அ.தி.மு.க. வுக்கு கிடைக்காது.  அதுபோல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருக்கும் போது அ.தி.மு.க.வுக்கு ஓட்டளித்த வந்த ஆதிதிராவிடர்கள் குறிப்பாக அருந்ததியர்கள், பெண்கள், முத்தரையர்கள், பிராமணர்களின் ஓட்டுகளும் அ.தி.மு.க. வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனால் ஏற்பட்ட பிளவும் அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  இதை கருத்தில் கொண்டே கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தி.மு.க. வை எதிர்ப்பவர்களின் ஒரே நம்பிக்கையாக இன்னமும் அ.தி.மு.க. தான் உள்ளது. அந்த இடத்தில் பா.ஜ.க வை கொண்டு வருவதற்கு தான் முயற்சித்து வருகிறேன் என அமித் ஷாவிடம் கூறியுள்ளார். மேலும் யார் பிரதமர் என்று சொல்லாமல் தேர்தலை சந்தித்தால் வெற்றி கிடைக்காது என்பது அ.தி.மு.க.,வுக்கு தெரியும். இது போன்ற சாதகமான அம்சங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பா.ஜ.,வின் எதிர்காலம் கருதி முடிவெடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியை மையப்படுத்தி புதுக் கூட்டணி அமைக்கும் அண்ணாமலையின் வியூகத்தை செயல்படுத்த, அமித் ஷா பச்சைக் கொடி காட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜ. க  நிர்வாகிகள் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் தகுதியுள்ள ஒரே கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. பிரதமர் மோடியை மையப்படுத்தி, பா.ஜ., தலைமையில் அமைக்கும் புதுக் கூட்டணி வாயிலாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். தனித்துப் போட்டியிட்டால் தேர்தல் களத்தில் தி.மு.க.- பா.ஜ.க   என்ற இருமுனைப் போட்டி நிலவுமே தவிர. அ.தி.மு.க.வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட முடியும். ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் பட்சத்தில் 2026ல் பிரதான எதிர்க்கட்சியாகவும், 2031ல் ஆளும் கட்சியாகவும் பா.ஜ., உருவெடுக்கும் என அமித் ஷாவிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பான புள்ளி விபரங்களையும் அண்ணாமலை கொடுத்துள்ளார். அதன் பின்னரே அவரது நடவடிக்கைகளை தொடர அமித் ஷா அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது.

Tags:    

Similar News