கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கப்படுமா?

கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட வேண்டும் என தொல்லியல்துறை வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-03-07 03:30 GMT

கீழடி மேப்(பைல் படம்)

தேனி மாவட்டம், வருசநாடு வைகை ஆறு தோன்றிய இடத்தில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை வரை அருகாமை பகுதிகளில் 2013-14-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இதில் கீழடி பகுதியில் மட்டும் 110 ஏக்கர் தொல்லியல் மேடு உள்ளது.

தற்போது இப்பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. மேலும் விவசாயத்துக்காகவும், மண் அள்ளுவதற்காகவும் அப்பகுதியில் தோண்டியபோது சில கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து இப்பகுதியில் கடந்த 2015 மார்ச்சில் பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல்துறை சார்பில் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கரிம பகுப்பாய்வு செய்ததில் கீழடி நகர நாகரீகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரிய வந்துள்ளது. மத்திய தொல்லியல்துறை சார்பில் முதல் மூன்று கட்ட அகழாய்வுகளும், நான்கு முதல் 8 -ஆம் கட்டம் வரை தொடர்ந்து தமிழக தொல்லியல்துறையும் அகழாய்வு செய்தது. தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுகள் இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றன. அகழாய்வு மூலம் கீழடி வாழ்விடம் மற்றும் தொழிற்கூடமாகவும் இருந்துள்ளது. கொந்தகை ஈமக்காடாகவும், அகரம், மணலூர் வாழ்விடம் மற்றும் விவசாயப் பகுதியாகவும் இருந்துள்ளன.

தொல்பொருட்கள்: அகழாய்வு மூலம் உறை கிணறுகள், வெள்ளிக் காசு, செங்கள் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய், சூதுபவளம், அகேட் மணிகள், நீல நிற கண்ணாடி மணிகள், இரும்பு எழுத்தாணி, சுடுமண் முத்திரைகள், தந்தந்தால் ஆன தாயக்கட்டைகள், தந்தத்தால் ஆன சீப்பு, அரவைக் கல், மண் குடுவை, பவள மணிகள், நூல் நூற்கும் தக்காளிகள், கூர்முனை கொண்ட எலும்பு கருவிகள், தங்கம், இரும்பு, செம்பு உலோக பொருட்கள், சுடுமண் பொம்மைகள், உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள விலங்குகளின் எலும்புத் துண்டுகள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் அந்த எலும்பு துண்டுகள் திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, மான், காட்டுப்பன்றி, மயில் போன்ற உயிரினங்களுக்குரியவை என கண்டறியப்பட்டன. இதன் மூலம் பழங்கால தமிழர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பிலும் சிறந்து விளக்கி உள்ளனர். மேலும் சில உயிரினங்களை விவசாயத்துக்காகவும், சில உயிரினங்களை உணவுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

கீழடி அகழ் வைப்பகம்: கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கொந்தகையில் 2 ஏக்கர் ஒதுக்கப்பட்டு, 30,000 சதுர அடியில் ரூ.12.21 கோடியில் கீழடி வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கீழடி வைப்பகம் செட்டிநாடு கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. தேக்கு மரங்கள், மேற்கூரைக்கு மண் தட்டோடுகள், தரைக்குடி ஆத்தங்குடி டைல்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொல்பொருட்களை வகைப்படுத்தி தனித்தனி அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வு பணி குறித்த காட்சிகளை ஒளிப்பரப்ப காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் பார்வையிடும் வகையில் பழமையான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தெப்பக்குளம் அமைத்து, அங்கு பார்வையாளர்கள் ஓய்வெடுக்க நான்கு திசைகளிலும் மாடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திறந்த வெளி அகழ் வைப்பகம்: கீழடியில் ஒரு ஏக்கரில் அகழாய்வு பணிகள் நடைபெற்ற இடத்திலேயே குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

9-ம் கட்ட அகழாய்வு : கீழடியில் இதுவரை 8 -ஆம் கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில், 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News