காந்தி கிராமத்தில் ஓர் அகஸ்தியர் வனம்
அபூர்வ வகையான தாவரங்களை நவீன முறையில் பாதுகாக்கும் தாவரவியல் காப்பகத்தை திண்டுக்கல் காந்திகிராம பல்கலை. உருவாக்கியுள்ளது.
இயற்கையை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) என்னும் அமைப்பு உலக அளவில் அழிந்து வரும் நிலையில் உள்ள அபூர்வ வகையான தாவரங்களை உயர் தொழில்நுட்ப வசதியுடன் பாதுகாத்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கழக வளாகத்தில் அகஸ்தியர் வனம் என்ற தாவரவியல் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் மலையில் விளைந்து இருக்கும் மிகவும் அபூர்வ வகையான மரங்களை இங்கு வளர்க்கின்றனர். அதாவது ருத்திராட்சம், காட்டு ஜாதிக்காய், புன்னை, மகாகனி, நாகலிங்கம் பூ, நெட்டிலிங்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த மரங்களை போன்சாய் தொழில்நுட்ப முறையில் வளர்க்கின்றனர்.
போன்சாய் தொழில்நுட்பம் என்பது மிகவும் உயரமாகவும் அடர்ந்தும் பல ஏக்கர் பரப்பில் வளரும் ஒரு மரத்தை, அதன் ஒரிஜனல் தன்மை மாறாமல், முதிர்ந்த தோற்றத்துடன் இரண்டு அடி முதல் ஐந்து அடி உயரத்திற்குள் வளர்க்கும் வசதி கொண்டது. இந்த மரங்கள் எதிர்காலத்தில் அழிந்து போனால் அதில் உள்ள இலைகள், விதைகள், தண்டுகள் மூலம் திசுவளர்ப்பு முறையில் மீண்டும் அந்த மரங்களை அதன் முழு அளவிற்கு வளர்த்தெடுக்க முடியும். அதாவது தற்போது சுருக்கமாக 5 அடி உயரத்திற்குள் வளர்ந்த ஒரு ஆலமரத்தை திசுகல்சர் முறையில் மீண்டும் நுாறு அடி உயரம், 500 அடி சுற்றளவிற்குள் பிரமாண்டமாக வளர்த்தெடுக்க முடியும்.
தற்போது பாலிஎத்திலீன் என்ற கார்பன் சீட் வலை போட்ட இடத்தில் இந்த மரங்கள், அழகு தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. கார்பன் சீட் வலை போட்டுள்ளதன் மூலம் மரங்களுக்கு தேவையான கார்பன்டை ஆக்ஸைடு முழுமையாக கிடக்கும். தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்கும். அதிகளவு சூரிய ஒளியால் மரங்கள் பட்டுப்போகாமல் பாதுகாப்பாக வளர்க்க முடியும். மிகவும் குறைந்த அளவு நீரை கொண்டு மரங்களை செழிப்புடன் வளர்க்க முடியும்.
இந்த தாவரவியல் காப்பகத்தை மேலும் பல ஏக்கர் பரப்பில் விரிவுபடுத்தி, இமயமலை முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை உள்ள அபூர்வ வகை மரங்களையும், மூலிகை செடிகளையும் வளர்த்து பாதுகாக்க வேண்டும். இது பற்றிய அறிவையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் மாணவ, மாணவிகளுக்கு விளக்க இந்த தாவரவியல் காப்பகத்தை பயன்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.