அசுர வேகத்தில் வளர்கிறதாம் அதிமுக.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அசுர வேகத்தில் வளர்ச்சி அடைவதால் பிற கட்சிகளில் இருந்து வந்து இணைகின்றனர் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக என்பது கண்ணாடி அல்ல என்றும் அது சமுத்திரம் என்றும் சமுத்திரத்தில் கல் வீசினால் அந்த கல் காணாமல் போய் விடும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இணைந்து கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலை சந்தித்தன. பெரிய அளவில் அதிமுகவிற்கு பயன் இல்லை என்றாலும் பா.ஜ.க 4 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியது பாஜக. வரும் லோக்சபா தேர்தலிலும் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நீடிப்பதாக அரசியல் கட்சி த்தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டணி கட்சியான பாஜகவில் இருந்து அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதற்கு வானதி சீனிவாசன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் கருத்துகளை கூறி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன் என்று கூறினார். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்க தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம்.
அரசியல் கட்சி அப்படி தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன் என்றார். நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பாஜகவை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், அண்ணாமலை கூறியது பற்றிய கருத்துகளுக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதிமுக என்பது அசுர வளர்ச்சியடையும் கட்சி, அந்த கட்சியில் பலரும் தானாக வந்து இணைகின்றனர். நாங்களாக யாரும் பாஜகவினரை அழைக்கவில்லை. கட்சியில் இணைவதை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகக்கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக என்பது கண்ணாடி அல்ல யாராவது கல் வீசினால் உடைந்து போகாது. அதிமுக ஒரு பிரம்மாண்டமான சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் யாராவது கல் வீசினால் காணமல் போய் விடுவார்கள்.
தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அம்மா மாதிரி ஒரு லீடர் என்று யாரும் சொல்ல முடியாது. அன்பு காட்டும் போது அம்மாவாகவும் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமையாகவும் நடந்து கொள்ளும் மாபெரும் தலைவர் அவர் . மீசை வைத்தவன் எல்லாம் கட்ட பொம்மன் கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாவாக முடியாது - ஜெயலலிதாவிற்கு நிகரான தலைவர் யாரும் இனி வர முடியாது . 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது பற்றி பாஜக தலைவர்களும் கூறியுள்ளனர், அதிமுக தலைவர்களும் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி நீடிப்பதாகவும் தெரிவித்தார் ஜெயக்குமார்.