தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?

டெல்லி சென்று விட்டு வந்த வேகத்தில் தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பல விஷயங்களை உறுதிபடுத்துகின்றது.

Update: 2023-03-28 00:15 GMT

பாஜக தலைவர் அண்ணாமலை (பைல் படம்)

டெல்லி சென்று விட்டு வந்த வேகத்தில் தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பல விஷயங்களை உறுதிபடுத்துகின்றது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

முதலாவது தமிழக பாஜகவின் தலைவராக அவர் தான் இனி நீடிப்பார். அவரின் பதவிகாலம் முடிந்த பின்பும் சிறப்பு அந்தஸ்து கொண்ட தலைவராக நீடிப்பார். அதில் மாற்றமில்லை. இரண்டாவது அண்ணாமலை அரசியல் செய்ய வரவில்லை. வழக்கமான கூட்டணி தொகுதி நிலவரம், தந்திர அரசிய என எதற்கும் அனுப்பப்படவில்லை. அவர் ஒரு புல்டோசர் போல அனுப்பபட்டிருக்கின்றார். அதை சரியாக செய்ய டெல்லி முழு ஒத்துழைப்பு வழங்கும். மூன்றாவது என்ன தான் 2026 சட்டசபை தேர்தல் இலக்கு என அவர் சொன்னாலும் நிஜத்தில் கட்சியின் வெற்றி தோல்வியினை பற்றி கொஞ்சமும் கவலைப்படாது அடித்து ஆடும் அண்ணாமலையின் அரசியல் தமிழகத்திற்கு புதிது.

இப்படி பல விஷயங்களை சொல்லி அண்ணாமலை மேல் பாயும் எல்லா பாஜகவினரையும் தலையில் மெல்ல தட்டி வாயை அடக்கி  உட்கார வைத்திருக்கின்றது டெல்லி. அமித் ஷாவை பார்த்து விட்டு வந்த வேகத்தில் திமுகவின் 27 பேருக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி சொத்து என அவர் அறிவித்திருப்பது, டெல்லியின் அதிரடி அரசியல் தொடங்கி விட்டது. பாஜக மாபெரும் முடிவோடு தமிழகத்தை முற்றுகை இட்டு விட்டது என்பதை  சொல்கின்றது.

என்னதான் மக்களாட்சி என்றாலும் இங்கு நடப்பது மன்னர் கால அரசியல். இங்குள்ள அரசியல் அப்படித்தான் உருவம் மாறுமே தவிர அடிப்படை மாறாது. பாஜக எனும் பெரும் அரசனுக்கு கப்பம் கட்ட (எம்பிக்களை தர) திமுக ரெடி, அதிமுகவும் தயார். இங்கு கூடுதல் கப்பம் அதாவது எம்பிக்கள் தர அதிமுக தயார். ஆனால் இரண்டும் வேண்டாம் நேரடியாக இனி என் ஆட்சி என பாஜக களமிறங்குகின்றது. அதன் தளபதி அண்ணாமலை. அவர் ஏப்ரல் 14ம் தேதி சொல்லப் போகும் பட்டியல் தான் முதலில் வீசப்படும் பெரும் குண்டு.அதை தொடர்ந்து தான் கோட்டை சுவரை வீழ்ந்த யுத்தம் தொடங்கும். 

நிச்சயம் அவர் தென்காசியில் சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பை சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம். கவனியுங்கள், திமுக தரப்பு பெரும் அமைதி. கனத்த அமைதியுடன் உள்ளது. தி.மு.க.வில் ஒருவராவது அண்ணாமலை முடிந்தால் நிருபிக்கட்டும். எங்கள் கட்சியில் அப்படி யாரும் இல்லை என்பதால் அச்சமில்லை என சொல்லவே இல்லை. இந்த அமைதி தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அண்ணாமலை மீது ஏற்படுத்துகின்றது. எப்போதும் வழக்கமாக எதிர்க்குரல் கொடுக்கும் திமுக இம்முறை கனத்த அமைதியுடன் இருக்கிறது.

இதுதான் தமிழகத்துக்கு தேவையான அரசியல். அக்கா வானதியின் "அண்ணன் ஸ்டாலின் அவர்களே" போன்ற அரசியலும் பொன்னாரின் "மரியாதைக்குரிய அய்யா ஸ்டாலின்" வசனங்களும் இங்கு எடுபடாது.  இங்கு அடிக்க வேண்டும் ஓங்கி அடிக்க வேண்டும். அதற்கு திமுகவின் ஆணிவேர் வரை தோண்டிபார்க்கும் பலமும் தைரியமும் பன்னாட்டு தொடர்பும் பெரும் பின்புலமும் வேண்டும். அது அண்ணாமலைக்குக்குத்தான் இருக்கின்றது. 

அதை செய்யும் பலமும் வாய்ப்பும் தகுதியும் அண்ணாமலையிடம் மட்டும் தான் இருக்கின்றது. ஏபரல் 14ல் அவர் சொல்லப் போகும் பட்டியல் சுமார் 100 ஆண்டு கால தமிழக அரசியலை நிச்சயம் அசைக்கும். இதனால் தமிழக பாஜகவினரும் வோட்டு கணக்கிட்டு கூட்டணி அவசியம் என புலம்புவோரும், எல்லோரையும் அணைப்பவனே தலைவன் என அறிவுரை சொல்வோரும் அமைதியாக இருத்தல் நலம். கூண்டைவிட்டு வெளிவரபோவது கிளி அல்ல, அது டைனோசர். இங்கு நடக்கப்போவது அரசியல் அல்ல, இது யுத்தம் மாபெரும் யுத்தம், அதை நடத்த அண்ணாமலையைத் தவிர யாருக்கும் சக்தி இல்லை.

வழமையான ஒரு தொகுதி இரண்டு தொகுதி விளையாட்டு அல்ல, மெல்லமாக விளையாடும் சதுரங்கம்,கேரம்போர்டு ஆட்டம் அல்ல. இது இனி போர், இறங்கி அடிக்கும் போர், காலகாலமான கோட்டைகளை தகர்த்தெறியும் உக்கிரமான போர். இரு எதிர்களில் ஒரு எதிரி பலவீனமான நேரம் அவனோடு கூட்டணி அது இது என பேசமால் உன் இடம் எனக்கு என அடித்து மோதும் போர். இப்போது பெரிய ஆச்சரியமெல்லாம் அண்ணாமலையின் பேட்டியினை தொடர்ந்து ஆர்.எஸ். பாரதி எப்படி அமைதியாய் இருக்கின்றார் என்பது தான். "இது மோசமான கட்சி டோய்" என அடிக்கடி சொல்லும் அவர் என்னென்ன திட்டம் வைத்திருப்பார் என்பதை நினைத்தாலே பகீரென்கின்றது. ஆர்.எஸ் பாரதியினை அண்ணாமலை எப்படி எதிர்கொள்ள போகின்றார் என்பதுதான் முதல்கட்ட எதிர்பார்ப்பு.இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News