டெல்லியில் 50-50: பின்னணியில் இருக்கிறதா பாஜக..?
சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் வரவுள்ள தீர்ப்பால் பாதிக்கப்படும் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடும் என்பதே உண்மை நிலை
அங்கு, திரைமறைவில் பாஜக யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதிமுகவின் இந்த விவகாரம் இறுதிக்கட்டத்திற்கு வரும். பாஜகவின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரியவரும் என தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் மனமாற்றம் ஏன்? பாஜக உண்மையில் யாரை ஆதரிக்கிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் லாஜிக்கலான பதில்களை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.
கேள்வி : என்ன நடந்தாலும் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனச் சொல்லிவந்த ஓபிஎஸ் அணி, திடீரென வேட்பாளரை வாபஸ் வாங்கியதற்கு என்ன காரணம்?
பதில் : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தளவுக்கு தங்களுக்கு பின்னடைவைத் தரும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிகாரம் இருக்கிறதா, செல்லுமா செல்லாதா என்பதில் ஒரு தீர்வு கிடைக்கும் அல்லது தேர்தல் ஆணையத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள் என உத்தரவு கிடைக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு சட்டப்பூர்வ கட்டப்பஞ்சாயத்து மாதிரி நடந்ததை ஓபிஎஸ் அணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த பொதுக்குழுவை செல்லாது என்று ஓபிஎஸ் சொன்னாரோ, அதையே கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என்று நீதிமன்றம் சொன்னது ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு தான். அதேசமயம், எந்த ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சொன்னாரோ, அந்த ஓபிஎஸ்ஸின் கருத்தைக் கேட்டு வேட்பாளரை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமிக்கு சங்கடம் தான்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகம் தான். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவது கட்சி விரோத நடவடிக்கை ஆகிவிடும். அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று ஓபிஎஸ் நினைத்திருப்பார். அப்படி நடந்து விட்டால், ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து, தேர்தல் ஆணையத்திற்குச் சென்றால், இந்த போட்டி வேட்பாளர் நிறுத்தியது தனக்கு எதிரான ஆதாரமாக ஈபிஎஸ் தரப்பால் முன் வைக்கப்படும் என்ற உண்மையை உணர்ந்திருப்பதால் தான், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, வேறு வழியின்றி இரட்டை இலை சின்னத்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டிருக்கிறார். இதை இந்த தீர்ப்பின் விளைவாக நடந்ததாகத்தான் நான் பார்க்கிறேன்.
கேள்வி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததுமே, ஓபிஎஸ் தரப்பின் கருத்தும் கேட்கவேண்டும் என கூறப்பட்டதால் அது ஓபிஎஸ் அணிக்குச் சாதகமான தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. ஈபிஎஸ் அணியின் சி.வி.சண்முகமும், இந்த தீர்ப்பை விமர்சித்திருந்தார். 2 நாட்களில் இந்த காட்சிகள் எப்படி மாறியது?
பதில் : ஓபிஎஸ்ஸின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமி இப்போது சவால் விட்டுக்கொண்டிருப் பதற்கான வாய்ப்பும் நேரமும் இப்போது இல்லை. அந்த புள்ளியை விட்டுவிட்டு பதுங்கி, பின்வாங்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது ஓபிஎஸ் அணியினர், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அது தேவையில்லாத ரசாபாசங்களுக்கு வழிவகுக்கும். அதேசமயம், எம்ஜிஆர் கண்ட சின்னம், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அறிக்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதை தடுக்கும் சூழல் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இந்த தீர்ப்பு அந்தவகையில் ஈபிஎஸ் தரப்பை கட்டிப் போட்டிருக்கிறது. துரோகி ஓபிஎஸ்ஸுக்கும், அதிமுகவுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களால் இப்போது அந்த வார்த்தையை சொல்ல முடியவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைமுறைகள் மார்ச் முதல் வாரத்தோடு முடிந்து விடும். சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு அந்த கால கட்டம் வரையும் தான். அதன் பிறகு பிரதான வழக்கில் வரும் தீர்ப்பு தான் யாருக்கு தோல்வி, யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும்.
கேள்வி : ஞாயிற்றுக்கிழமையன்று ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிவிட்டார், நடுநிலையோடு செயல்படவில்லை என விமர்சித்திருந்தார். அதை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாமே?
பதில் : தென்னரசு வேட்பாளராக இருக்கலாமா வேண்டாமா என்பதை பொதுக்குழுவை கூட்டி முடிவெடுங்கள் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை. யார் வேட்பாளர் என்பதை பொதுக்குழுவை கூட்டி முடிவெடுங்கள் என்றுதான் சொன்னது. அப்படி இருக்கும்போது, அவைத்தலைவர் அனுப்பிய சுற்றறிக்கையில் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா என்பதே தவறானது. போட்டியிட விரும்பிய அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை டிக் அடிக்கச் சொல்லி இருக்கவேண்டும் அல்லது, யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழு உறுப்பினர்களையே குறிப்பிடச்சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், அவைத்தலைவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமலோ, அல்லது வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ, தென்னரசுவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். ஓபிஎஸ் அறிக்கை விட்டதுமே, இதை சட்ட வல்லுநர்கள் மூலம் மீண்டும் கொண்டு செல்லப்போவதாக தகவல்கள் வந்தது. ஒருவேளை பாஜக, இதற்கு மேலும் பிரச்சனையை வளர்க்காதீர்கள் என்று சொல்லியிருக்கலாம். அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாகவே எந்தவித சிக்கலும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை தென்னரசு பெற்றுள்ளார்.
கேள்வி : கடந்த 6 ஆண்டுகளாக தங்களுக்கு விசுவாசமாக இருந்து வரும் ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி வசம் ஒப்படைக்க பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?
பதில் : கட்சி நடைமுறையில் எடப்பாடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஓபிஎஸ் மட்டுமல்ல, எடப்பாடியும் பாஜக கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். நான்கரை ஆண்டு காலம் ஈபிஎஸ் ஆட்சியில் இருந்தபோது அவரை முழுக்க முழுக்க இயக்கியது பாஜக தான். அவர் நேரடியாக போகவில்லை என்றாலும், தங்கமணி, வேலுமணி மூலம் எல்லாம் நடந்தது. தன்னை இணைந்து செயல்படுமாறு மோடி சொன்னதாக ஓபிஎஸ் சொல்கிறார் என்றால், அதற்கு முன்னதாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் அறிவுறுத்தல் போயிருக்கும். 2 பேரையும் பாஜக தலைமை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ்ஸை விடவும் இரண்டு மடங்கு பணிவாக இருந்தார் ஈபிஎஸ்.
இப்போது தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லும் வார்த்தைகளின்படி பார்த்தால் பாஜகவை வேண்டாத சுமையாகத்தான் அதிமுக தொண்டர்கள் பார்க்கிறார்கள். பாஜக நமக்குத் தேவைதானா என்ற எண்ணம் எடப்பாடிக்கு வந்திருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்தும் துணிச்சல் இன்னும் அவருக்கு வரவில்லை. அதனால் தான் தேர்தல் பணிமனை பேனரில் கூட்டணி பெயரை மாற்றிப் போடுகிறார். 6 மணி நேரம் கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை. பின்னர் அதையும் மாற்றி அதிமுக தலைமையிலான கூட்டணி என்று வைக்கிறார். 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிடுகிறார். அண்ணாமலை வந்து பார்த்துவிட்டுப் போனபிறகு தள்ளி வைக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் நாசூக்காக பணிந்து போகிறார். இபிஎஸ்ஸூம் பாஜக கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்.
கேள்வி : பாஜக, ஓபிஎஸ்ஐ தாண்டி ஈபிஎஸ் பக்கம் ஆதரவளிப்பதற்கு காரணம் எடப்பாடியும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று பாஜக நினைப்பதால் தானா? அல்லது அண்ணாமலை போன்றவர்களின் லாபி இருக்கிறதா?
பதில் : இதில் 2 விஷயங்கள் இருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் இறுதி இலக்கு. கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எடப்பாடி பழனிசாமி தான் என்ற யதார்த்தத்தை உணர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வளவு ஆதரவு ஈபிஎஸ்ஸுக்கு இருப்பது தெரிந்திருந்தும் முழுமையாக அவரை அங்கீகரிக்க மறுக்கிறது பாஜக. ஏற்கனவே 2 தேர்தல்களில் எடப்பாடி பேச்சைக் கேட்டு தோல்வியைச் சந்தித்தோம். மேலும், எடப்பாடியை தங்கள் பிடியில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் இவ்வளவு தூரம் இழுத்தடித்து ஆதரவு அளித்திருக்கிறது பாஜக. எடப்பாடி பழனிசாமியை முழுமையாக அங்கீகரிக்கவும் பாஜக தயாரில்லை. ஓபிஎஸ்ஸை முழுமையாக கைவிடவும் பாஜக தயாரில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பாதிக்கப்படும் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடும். அங்கு, திரைமறைவில் பாஜக யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதிமுகவின் இந்த விவகாரம் இறுதிக்கட்டத்திற்கு வரும். பாஜகவின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரியவரும்.
கேள்வி : சுப்ரீம் கோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவு என்பது இறுதித் தீர்ப்புக்கான முன்னோட்டம் என எடுத்துக் கொள்ளலாமா?
பதில் : அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. தீர்ப்பிலேயே, இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கானது மட்டும் தான் எனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு மூலமாக நாங்கள் யாருடைய அதிகாரத்தையும் பறிக்கவில்லை எனச் சொல்லியிருக்கிறது. எனவே, இதே மாதிரி தான் இறுதி தீர்ப்பு வரும் என்று சொல்ல முடியாது. இருவருக்குமே 50-50 வாய்ப்பு தான் இருக்கிறது. இதேபோன்ற குழப்பமான தீர்ப்பாக இருக்காது, யாராவது ஒருவருக்கு சாதகமான தீர்ப்பாகவே அது அமையும் என்று நம்புகிறோம். இறுதித் தீர்ப்பு ஓரளவுக்கு தெளிவான பாதையைக் காட்டும்.