வைகை அணையில் 150 மி.மீ., மழை, பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு அணைக்கு நீர வரத்து அதிகரித்தது.;
தென்மேற்கு பருவமழை கிட்டத்தட்ட கை விட்டது என்று விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. செப். 1ம் தேதியான நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவானது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் வருமாறு (மழையளவு மி.மீ.,ல் குறிப்பிடப்பட்டுள்ளது) : ஆண்டிபட்டி- 98.2, தேனி அரண்மனைப்புதுார்- 24, தேனி வீரபாண்டி- 11.2, பெரியகுளம்- 80.4, மஞ்சளாறு- 85, சோத்துப்பாறை- 61, வைகை அணை- 150.2 மி.மீ., போடி- 18.8 மி.மீ., உத்தமபாளையம்- 3.2 மி.மீ., கூடலூர்- 2.6 மி.மீ., பெரியாறு அணை- 39 மி.மீ., தேக்கடி- 13.4 மி.மீ., சண்முகாநதி- 7.4 மி.மீ., மழை பதிவானது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பெய்த இந்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 620 கனஅடியாக இருந்தது. மழையும், சாரலும் தொடர்வதால் இந்த நீர் வரத்து இன்று மாலைக்குள் விநாடிக்கு ஆயிரம் கனஅடியை கடந்து விடும். அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்ட உயரம் 118.25 அடியாக உள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 47.08 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 331 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து மதுரை மற்றும் ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக விநாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மஞ்சளாறு அணைக்கு விநாடிக்கு 108 கனஅடி நீரும், சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 47.20 கனஅடி நீரும் வந்து கொண்டுள்ளது.