world soil day 2023-நிலமும் நீரும் நிஜ வாழ்வின் அச்சாணி : வேளாண் உதவி இயக்குனர்..!

உலக மண்வள தினம் 2023 ல் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அவரது தகவல்களை விவசாயிகளுக்காக பகிர்ந்துள்ளார். அதில் மண்ணும் நீரும் எவ்வளவு அவசியமானது என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார்.

Update: 2023-12-06 04:21 GMT

world soil day 2023-தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் உதவி வேளாண் இயக்குனர் திலகவதி தலைமையில் உலக மண்வள தினம் அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி உலகுக்கு உணவளிக்கும் உழவர் சார்ந்திருக்கும் மண்ணின் முக்கியத்துவத்தை உலகோர் அறியும் வண்ணம் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மண்வளம் பேணுவது குறித்து பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவினை இருக்கும் மண்வளத்தினை சரியாக பாதுகாப்பதன் மூலமே அளிக்க முடியும் என்ற நோக்கில் மண்ணும் நீரும் நிஜ வாழ்வின் அச்சாணி என்று தலைப்பு கொடுத்துள்ளனர்.

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்"

பொருள் : 

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும் என்று வள்ளுவன் தனது ஈரடிக்கூற்றில் நிலமும் நீரும் எவ்வளவு அவசிமானது என்பதை அழகாகக் கூறியுள்ளான்.

மண்வளம் என்பது வெப்பமுள்ள உயிர் உள்ள மண். மண் தனது வெப்பத்தை இழக்கும் என்றால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இல்லை என்று பொருளாகும். நுண்ணுயிர்கள் இல்லை என்றால் மண்ணு சவமாகும். அளவுக்கு மீறிய ரசாயன உரங்களும் பயிர் பாதுகாப்பு என்ற பெயரில் நாம் அளித்த விஷங்களும் பயிரை பாதுகாத்திருக்கலாம். ஆனால் மண்ணைச் சவமாக்கி விட்டது.

மண் தனக்குரிய கட்டமைப்பை இழக்கும் பொழுது மண்ணுக்கும் நீருக்கும் ஆன தொடர்பும் விடுபட்டு விடும். அதிக நுண்ணுயிர்கள் நிறைந்த மண் புட்டு போல உரிய ஈரப்பதத்துடன் தன் மீது விழுகின்ற எதையும் உயிர்க்க வைக்கும். இறந்து போன எதையும் மக்க வைக்கும். எனவே மண்வளத்தை சரியான முறையில் பராமரிக்கும் பொழுது மண்ணுடன் சேர்ந்து நீரும் நமது உணவு உற்பத்தியை நிர்ணயிப்பதில் பெரும்பங்காற்றும்.

அதற்கு விவசாயிகள் அமுத கரைசல் ஜீவாமிர்த கரைசல் போன்ற உடனடி இயற்கை உரங்களை அதிக செலவின்றி உடனடியாக உற்பத்தி செய்து மண்ணின் தரத்தினை மண்ணின் வளத்தினை குறுகிய காலத்தில் மீட்டெடுக்க முடியும். கைப்பிடி மண்ணில் கோடி எண்ணிக்கையில் நுண்ணுயிர்களை வர வைக்க இயலும் மண்புழுக்கள் உங்களுக்காக உங்கள் மண்ணை பிரட்டுவதோடு உங்கள் பயிருக்கு தேவையான சத்துகளையும் வேருக்கு அருகில் திரட்டித் தரும்.

மண்ணின் நீரின் அளவும் மிக எளிமையான முறையில் சரியான அளவில் பராமரிக்க முடியும். வளமான தரமான மண் எவ்வகை இயற்கை இடர்பாடுகளையும் வறட்சியையும் தாங்கி நமது உணவு தானிய பயிர்களையும் பாதுகாக்கும் உற்பத்தி குறைவின்றி பார்த்துக் கொள்ளும். விவசாயிகள் கடனின்றி அதிக லாபத்துடன் வாழவும் வழி செய்யும். மண் பொய்க்காத போது விண்ணும் பொய்க்காது.

ஏனெனில் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் நீரே தொடர்புள்ளதாக உள்ளது. எனவே மண்வளத்தினை இயற்கையான முறையில் சரியாக பராமரித்து நீர் வளத்தையும் பாதுகாப்பதன் மூலம். மண் நமது நிஜ வாழ்வின் அச்சாணியாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வு உச்சாணியாக துளிர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே இயற்கையான உரங்கள் மூலிகை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தி மண்வளத்தையும் நீரையும் பாதுகாப்போம் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு வலியுறுத்தினார். மேலும் கலைஞர் திட்ட பஞ்சாயத்துக்களான அண்டமி ஆவிக்கோட்டை தளிக்கோட்டை பெரியகோட்டை சொக்கனாவூர் கன்னியாகுறிச்சி நெம்மேலி போன்ற ஏழு பஞ்சாயத்துகளிலும் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் மண்வள அறிக்கையினையும் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் தினேஷ் ராமு பூமிநாதன் மற்றும் முருகேஷ் செய்திருந்தனர். வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினர். பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் விவசாயிகளை ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் ராஜூ மற்றும் அய்யா மணி நன்றி கூறினர்.

Tags:    

Similar News