ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி, கருத்தரங்கம்

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2022-10-22 07:33 GMT

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரியில், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அறிவுரைப்படி, மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. இவ்விழாவில் வேளாண் விஞ்ஞானிகள், அரசுத்துறை தலைவர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தன் உரையில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதிலும் பாரம்பரிய ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதிலும் நமது அரசு பல திட்டங்களை இதற்கென தீட்டி செயல்படுத்தி வருகிறது.


அதில் ஒன்றாகத்தான் இன்றைய தினம்   தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி தஞ்சை மாவட்ட அளவிலான பாரம்பரிய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்கள் வைத்திருக்கும் ரகங்கள் பிற விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும் மரபு சார் பன்முகத்தன்மை கருத்தரங்கம் இன்று நடைபெற்று வருகிறது.

பாரம்பரிய ரகங்கள் பல்வேறு பண்புகள் கொண்டவை. பல்வேறு கால வகைகளுக்கும் ஏற்றது. ஆண்டு முழுவதும் பயிர் செய்யக் கூடிய ரகங்கள் நம் நாட்டில் உள்ளது. வறட்சி மற்றும் வெள்ளம் தாங்கி வளரக்கூடியவையும் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டறிந்து விவசாயிகளுக்கு  அவற்றின் சாகுபடியை  ஊக்குவிக்கும் நோக்கில் வேளாண்துறை நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது. அத்துடன், பிற விவசாயிகளும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் மாவட்ட அளவில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொண்டார்.

கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் வேலாயுதம் மரபுசார் பல்லுயிர் பன்முகத்தன்மை பயிருக்கு பயிர் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றி எடுத்துக் கூறியதோடு கொரோனா தொற்று நோயினால் மனித சமுதாயம் முடங்கியதற்கு காரணம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. ஆனால் பாரம்பரிய ரகங்களை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்கள் 160 நாள் பயிராக உள்ளது. அதன் தன்மை மாறாமல் விவசாயிகளுக்கு மத்திய கால ரகமாக அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெறுவதாக  கூறினார்.

அண்ணாமலை பல்கலைக்கழக இயற்கை விவசாயம் மற்றும் வளங்குன்றா  வேளாண்மையின் இயக்குனர் ராமன், விவசாயிகளுக்கு கவிதைகள் மூலம் மண்ணின் தன்மை கெடாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது பற்றியும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றியும் அழகாக எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையின் பயிர் மரபியல் துறை பேராசிரியர் மணிமாறன், பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களின் குண நலன்கள் மற்றும் அவற்றின் நோய் எதிர்ப்புத்  திறன் பற்றி எடுத்துக் கூறினார்.

டாக்டர் புஷ்பா, பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவக் குணங்கள் பற்றி எடுத்துக் கூறினார். ஈச்சங்கோட்டை பேராசிரியர் ஜெகன்மோகன், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறி பயிர்களை சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்கள் மற்றும் அதனை மேற்கொள்வதற்கான வழிவகைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

பாரம்பரிய நெல் ரகங்களின் புவிசார் குறியீடு பெறுவதற்கான  சட்ட விதிகள், அதற்கான மையங்கள் பற்றியும் உதவிப்  பேராசிரியர் டாக்டர் பாரதி எடுத்துக் கூறினார்.

பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் நாட்டு காய்கறிகளின் நன்மைகள் பற்றியும் முன்னோடி விவசாயி சித்தர் எடுத்துக் கூறினார்.

புதுக்கோட்டையில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியங்கள் மூலம் மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் தலைவர் ஆதப்பன் அவர்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எவ்வாறு மதிப்பு கூட்டி அவற்றை விற்பனை செய்யலாம் அவற்றில் உள்ள இடையூறுகள் மற்றும் களைவதற்கான வழிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மதியம் பாரம்பரிய அரிசியில் அறுசுவை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. மதியத்திற்கு மேல் விவசாயிகளுடன் கலந்துரையாடலும் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடந்தன. அவைகளை மிக அழகாக நடித்துக் காண்பித்தனர். கருத்தரங்கில் வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், கோமதி, தங்கம் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை 14 வட்டார அட்மாத்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

விவசாயிகளுக்கும் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் முன்னோடிகள் விவசாயிகளுக்கும் ஈஸ்வர் நன்றினை தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News