மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் வயல் தின விழா
மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று வயல் தின விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசை ஏடி 12 132 பிரபலப்படுத்தும் வயல் தின விழா நடைபெற்றது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் நமது டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏற்ற பல்வேறு நெல் தினுசுகள் ஆராய்ச்சி செய்தபின் விவசாயிகளுக்கு வழங்கி வயல்வெளியில் அவற்றின் குணாதிசயங்கள் வயல்வெளி ஆய்வுத்ததிடல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய வயல்வெளி ஆய்வு திடலில் தாளடியில் நமது டெல்டா விவசாயிகளால் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ஆடுதுறை 39க்கு மாற்றாக ஏடி 12 132 எனும் நெல்வரிசை ஒலயகுன்னம் முன்னோடி விவசாயி ஆரோக்கியசாமி வயலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் தாளடிக்கு ஏற்ற நடுத்தர சன்ன அரிசி கொண்ட புதிய நெல் ரகம் ஏடிடி39 மற்றும் கோனார்க் எனும் ஒரிசா ரகத்தினை பெற்றோராகக் கொண்டு 125லிருந்து 130 நாட்கள் வயது உடையதாக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வயல் தினவிழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையிலும் பட்டுக்கோட்டை ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் பாபு மற்றும் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் முன்னிலையில் வயல் தின விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் சுப்ரமணியன், ஏ.டி.39க்கு மாற்றாக எடிடி 58 என வெளியிடப்படவுள்ள இந்த ரகமானது அதிக எண்ணிக்கையிலான கதிர் உள்ள தூர்கள் மற்றும் அடர்த்தியான அடித்தூர் மற்றும் சாயாத தன்மையுடையது. நடுத்தர சன்ன அரிசியான இது 16.5 கிராம் எடை உடையது. 72% அரவைத் திறனும் 65 சதவீத முழு அரிசி காணும் திறனும் உடையது.
மேலும் குலை நோய் இலையுரை அழுகல் நோய் இலை மடக்குப் புழு மற்றும் தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது. எனவே விவசாயிகள் அக்டோபர் 20 முதல் நவம்பர் மாதத்திற்குள் இந்த ரகத்தினை தேர்வு செய்து சாகுபடி செய்வதன் மூலம் பிப்ரவரி 20க்குள் அறுவடைக்கு வந்து விடும் என தெரிவித்தார்.
ஏடிடி58 ரகத்தினை சாகுபடி செய்துள்ள விவசாயி ஆரோக்கியசாமி, இந்த ரகத்தின் இலைகள் வெளீர் பச்சை நிறத்தில் இருப்பதுடன் ஒவ்வொரு குத்திலும் அதிக கிளைகள் வெடித்து அதிக கதிர்களும் காணப்படுகிறது. மேலும் கதிரின் அடிப்பகுதியில் உள்ள நெல்மணிகள் பதராக இல்லாமல் நெல்மணிகள் முழுமையாக உள்ளது என தெரிவித்தார்.
வடுவூரிலிருந்து வருகை புரிந்த முன்னோடி விவசாயி குபேந்திரன், இயற்கையான முறையில் இந்த ரகத்தினை சாகுபடி செய்துள்ளதாகவும் பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, எதிர்வரும் தாளடி பருவத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான ஏடிடி 58 விதைகள் உற்பத்தி செய்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஆடுதுறை உதவி பேராசிரியர் தண்டபாணி, புதிய நெல் ரகவரிசை ஏடி12132 எனும் ஏடிடி58 ரகம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தாளடிக்கு ஏற்ற மிகச் சிறந்த சன்னரகமாக அமைந்து விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும் என தெரிவித்தார்.
வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான ஏடிடி 39க்கு மாற்று ரகமான ஏ டி டி 58 டெல்டா விவசாயிகளை மட்டுமின்றி. சன்னரகமாக இருப்பதால் நுகர்வோரின் தேவையையும் சந்திக்கும். ஏனெனில் இந்த ரகமானது இட்லி மற்றும் சாதத்திற்கும் ஏற்ற ரகம் என தெரிவித்தார்.
முன்னோடி விவசாயிகள் அசோகன், ஆவிக்கோட்டை பாண்டியன் சேகர் பாலமுருகன் நெம்மேலி அறிவு செல்வன் திருஞானம் கஜேந்திரன் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.