தஞ்சை,வாடியகாடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்
தஞ்சை மாவட்டம், வாடியகாடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்ரமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாடியகாடு கிராமத்தில் கிராம அளவிலான திட்ட செயலாக்க குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
கிராம திட்ட செயலாக்க குழுவானது, கிராம ஊராட்சி மன்ற தலைவரை தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும், வேளாண்மை துறை உட்பட்ட 16 துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கியும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பை விவசாயிகளை ஒருங்கிணைத்து செயலாக்கம் செய்ய வேளாண்துறை பாலமாக உள்ளது.
அந்த அடிப்படையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விக்ரமம் ஊராட்சி மன்ற துணைதலைவர் பிச்சைமணி, காளிதாஸ் அன்பழகன் ,பெரமையன், சங்கர வடிவேல் வீரபாண்டியன் வருண் குமார் மற்றும் மகளிர் மற்றும் ஆண் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் வேளாண்துறை சார்பில் கலந்து கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கிராமத்தின் அடிப்படை விபரங்கள் மற்றும் அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களை சேகரிப்பதற்கான படிவங்களை விவசாயிகள் பதிவு செய்வதற்கான முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண் அலுவலர் சாந்தி, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத் திட்டங்கள் பற்றி செயலாக்க குழு கூட்டத்தில் எடுத்துரைத்தார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் திட்டங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றி எடுத்துக் கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைத்தெளிப்பான்கள், உளுந்து விதை, தென்னங்கன்றுகள்,பவர் டில்லர்கள் மற்றும் கடப்பாறை மண்வெட்டி போன்றவை விவசாயிகளுக்கு அதிக அளவில் தேவைபடுவதாக தெரிவித்தனர். கிராம அளவில் முக்கியமாக தேவைப்படும் வாடியகாடு பொது குளத்தினை தூய்மை செய்து கரை உயர்த்தித் தரவும், முன்பே கட்டி தரப்பட்டு சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள களங்களை சீர்படுத்தி தரவும், கிராம சாலைகள் அமைக்கவும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடங்கலின்றி வழங்கிடவும் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடுபட்ட விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகத்தில் படிவத்தைப் பெற்று தங்களுடைய அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமைக்குள் வழங்க வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். கூட்டம் வாடியகாடு அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நேற்று நடந்த கூட்டத்தில் திருச்சி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் ஓவியா, பவித்ரா, ரவீனா, பூஜா உள்ளிட்ட 6 மாணவிகள் கலந்துகொண்டு தென்னையில் ஊடுபயிராக காய்கறிகள் வளர்ப்பது பற்றியும் பழத்தோட்டங்கள் அமைப்பதின் முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.