புளியக்குடி பஞ்சாயத்தில் 225 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்
புளியக்குடி பஞ்சாயத்தில் 225 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகளை மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோவன் வழங்கினார்.;
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் புளியங்குடி பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 225 பண்ணை குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ மற்றும் புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் மூலம் வழங்கப்பட்டன.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி முன்னிலையில், துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அட்மா திட்ட அலுவலர் ராஜு மற்றும் தஞ்சாவூர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புடன் புளியக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலைஞர் திட்ட உழவன் போர்டலில் தனித்தனியாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் புளியங்குடி கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அவர்களின் விபரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், பிற துறை அலுவலர்களும் தங்கள் திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்து வழங்குவது மிக எளிதாகும்.
மேலும் இன்றைய தினம் புளியங்குடி கிராமத்தில் சோயா சாகுபடி முனைப்பு இயக்கமும் நடத்தப்பட்டு தைப்பட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் சோயா சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் 50% மானிய விலையில் சோயா விதைகள் மற்றும் டிவிரிடி வழங்குவது பற்றியும் எடுத்து கூறப்பட்டு, அதற்கான தொழில் நுட்ப செய்தி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் சூரிய பிரியா மூலம் வழங்கப்பட்டன.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியத்தில் வம்பன் எட்டு விதைகள் வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்தார். பின் அகிலா எனும் பயனாளியின் நிலத்தில் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் நடவு செய்வது குறித்த செயல் விளக்கம் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்து காட்டினர். புளியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி ஒரு தென்னங்கன்றினை நடவு செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி செய்திருந்தார்.