தேசிய ரூர்பன் இயக்கம் சார்பில், அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்தார்:
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகக் கூட்டரங்கில், தேசிய ரூர்பன் இயக்கம் சார்பில் அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2, தொகுதி 2 மற்றும் தொகுதி-4 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரப்பெற்றுள்ளன. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ,கூடுதலாக ரூர்பன் இயக்கத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. தேர்வாளர்களுக்கு பயிற்சி மையத்தில் தேவைகள் குறித்தும், அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும், தேர்வாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சிக்கு தயாராகும் தேர்வாளர்களின் நலன் கருதி சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படிப்பதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சிவகங்கையில், உள்ள பூங்காவில் தேர்வாளர்களுக்கு கட்டணமின்றி அமர்ந்து படித்திடவும், அதிக நேரம் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
தேர்வாளர்கள் படிக்கும் போது முக்கியமான பகுதிகளை குறிப்பெடுத்து வைத்து படிக்க வேண்டும். இதன்மூலம் முக்கியமானப் பகுதிகளை எளிதில் படிப்பதற்கு வசதியாக இருக்கும். தினசரி நாளிதழ்கள் மற்றும் முக்கியமான பருவ இதழ்களை படிப்பதன் மூலம் நடப்பு நிகழ்வுகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம். தற்போது ,விழாக்காலம் என்பதால், அதில் கவனத்தினை சிதறவிடாமல், ஒரே கவனத்தில் தேர்வை மட்டும் கருத்தில் கொண்டு படித்திட வேண்டும். தற்போது, மட்டுமன்றி பல்வேறு தேர்வுகள் குறித்து இளைஞர்களுக்கு வழிகாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு காலங்கள் மட்டுமன்றி தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்திட ஏதுவாக தனியாக அரங்கு கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தேர்விற்கு இன்னும் குறுகியகாலமே இருப்பதால், அதிகப்படியான புத்தகங்களை படிப்பதை குறைத்து முக்கியமான பாடங்களை படித்திட வேண்டும். தேர்வாளர்களின் விருப்பப்படி வாரந்தோறும் நடைபெற்று வந்த மாதிரித்தேர்வினை தினந்தோறும் நடத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிக்கும் நேரத்தினை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்வாளர்களுக்கு மாதிரி வினாக்கள் வழங்குவதற்கும், அதன்மூலம் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. தேர்வாளர்கள் நூலகங்களை பயன்படுத்துவதில் வழக்கமாக கொண்டு வரவேண்டும். தேர்வின் தன்மை குறித்து அறிந்து அதனை மதிப்பெண் அடிப்படையில் பிரித்து 80 சதவிகித்திற்கு மேலான பாடங்களை தற்போதைய, சூழ்நிலையில் கற்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் இடவசதி தேவைப்படும் பட்சத்தில் அதற்கும் வழி வகுக்கப்படும். இப்பயிற்சி வகுப்பு தேர்வாளர்களின் நலன் கருதி நடைபெறவுள்ளது. இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குர் கா.வானதி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மு.முத்துக்கழுவன், உதவி திட்ட அலுவலர்கள் க.செல்வி, கே.விஜயசங்கரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.