மதுரையில் 3 மாவட்ட நீர்வள நிலவள திட்ட மேம்பாடு பற்றிய ஆய்வு கூட்டம்
மதுரையில் 3 மாவட்ட நீர்வள நிலவள திட்ட மேம்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி எஸ். ஜவஹர் தலைமையில், மதுரை, தேனி, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து நீர்வளத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி எஸ். ஜவஹர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பணிகளில் நீர் மேலாண்மையை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உலக வங்கி நிதியுதவியுடன் (உலக வங்கி 70 சதவீத பங்கு ரூ.2962.0 கோடி மற்றும் 30 சதவீத தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.888.6 கோடி) மாநிலம் முழுவதும் உள்ள 47 ஆற்றுப் படுகைகளில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் 7 துறைகள் அதாவது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் வேளாண் பொறியியல் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் பல்கலைக்கழகங்கள் அதாவது , தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன் பல்கலைக்கழகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நீர்ப்பாசன விவசாயத்தின் உற்பத்தித்திறன் மற்றும் காலநிலை மீள்தன்மையை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல் நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மதுரை, தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.192 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள ஆயக்கட்டுதாரர்களின் நலனுக்காக 632 குளங்கள் 9 அணைக்கட்டுகள் என , மொத்தம் 62120 ஹெக்டேர் பரப்பளவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, நீர்வள நிலவள திட்டத்தின் வாயிலாக நீர்வளதுறை மூலம் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்துதல், மதகு பழுது பார்த்தல் மற்றும் களிங்கல் சீர்செய்தல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல, இத்திட்டத்தின் கீழ் வேளாண்துறை மூலம் பல்வேறு பயிர்வகை செயல்விளக்கம் செய்தல், உழவர் வயல்வெளி பள்ளி நடத்துதல், மண்புழு உரம் தயாரித்தல், தோட்டக்கலைதுறை மூலம் பல்வேறு காய்கறி மற்றும் பழவகை செயல்விளக்கம் செய்தல், சொட்டுநீர் பாசனம், நிலப்போர்வை அமைத்தல், வேளாண் பொறியியல்துறை மூலம் பண்ணைகுட்டை அமைத்தல், வேளாண் பல்கலைகழகம் மூலம் பல்வேறு பயிர்வகை செயல்விளக்கம் செய்தல், திருந்திய நெல்சாகுபடி செய்தல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகதுறை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து உழவர்களுக்கு கூடுதல் விலையில் விற்பனை விலை ஏற்படுத்திக் கொடுத்தல் நலிவடைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வியாபார அபிவிருத்தி மான்யம் அளித்தல், மீன்வளத்துறை மூலம் மீன்குஞ்சுகள் அளித்தல், கால்நடைதுறை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், ஊட்டச்சத்து அளித்தல் போன்ற உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிச்சாமி மற்றும் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.