வாசிப்பு திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர் பேச்சு
சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.;
எதிர்கால சந்ததியினர்களான பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் புத்தகவகைகளை பயின்று, வாசிப்புத்திறன் மற்றும் பொது அறிவை மேம்படுத்துகின்ற வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், மாவட்ட நூலகத்தில்தொடங்கி வைக்கப்பட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியன தொடர்பான நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி மாணாக்கர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணாக்கர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணையோடு அழைத்து வந்து, காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை அரசு பள்ளி மாணாக்கர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் 04.30 மணி வரை தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பாக செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு வரும் மாணாக்கர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும் பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.
மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கைகளை, நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது பொது அறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவைகளை சரிவர தொடர்ந்து மேற்கொண்டு, தங்களின் எதிர்காலத்திற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.