சிவகங்கையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: விழிப்புணர்வு:
சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
44-வது உலக செஸ் ஒலிம்பியாட்:குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
சிவகங்கையில், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற, ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், செஸ் தம்பி மாதிரி வடிவில் நின்று சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி பேசுகையில்,
தமிழக அரசு சார்பில் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது. இதில், 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிய தொடங்கியுள்ளனர். இதற்கான பயிற்சி ஆட்டமும் நடைபெற்று வருகிறது.
சதுரங்கப் போட்டியின் தாயகமாக இந்தியா உள்ளது. அதிகமான சதுரங்கப் போட்டி வீரர்களை கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
தற்போது, முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச அளவில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. இது, தமிழகத்திற்கு மேலும் பெருமை தருவதாக உள்ளது.
இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தமிழக அரசின் சார்பில் உலகநாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும், பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம், சதுரங்கப் போட்டியில் அதிகமான வீரர்களை மாவட்ட அளவில் உருவாக வேண்டும் என்பதாகும். மேலும், ஒருவர் புத்துணர்ச்சியுடனும், மனஉறுதியுடனும் செயல்பட விளையாட்டு மற்றும் முறையான உடற்பயிற்சி அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக, நமது மனநிலையை சீராக வைத்துக்கொள்ளவும், நமது இலக்கை சரியாக எய்வதற்கும் உறுதுணையாக அமைவது விளையாட்டாகும்..
மாணாக்கர்கள் தங்களது அறிவுத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இதுபோன்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து, படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமன்றி, விளையாட்டிலும் சிறந்து விளங்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் .துரைஆனந்த், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ராமதாஸ், சரவணன், கார்த்திகேயன். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், பள்ளி முதல்வர்கள் ஜோனா, புஷ்பம், மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.