சிவகங்கை கண்மாய் தூர்வாரும் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு
கண்மாய் பலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகளை செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர்மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம் கானூர் கண்மாயில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் பலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகளை செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கானூர் கண்மாயில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் பலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகளை செய்தியாளர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த ஓராண்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமன்றி, அனைத்துப்பகுதிகளிலும், வளர்ச்சிப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்திடும் பொருட்டு, குளங்கள் மற்றும் கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் ஆகியவைகளை சீரமைத்து, மழை நேரங்களில் பெறப்படும் நீரினை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சுமார் 1,058 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாயாக கானூர் கண்மாய் உள்ளது. இதன்மூலம் 2,806 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்மாயிலுள்ள,8 மடைகளில் 6 மடைகள் சேதமடைந்துள்ளதற்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், 1 மடையின் மூலம் 1,000 ஏக்கர் நிலங்கள் பரப்பளவு பாசன வசதி பெறப்படுகிறது. கண்மாயைச் சுற்றியுள்ள 6,780 மீட்டர் நீளத்திற்கு கரை பலப்படுத்தும் பணியும், உபரி நீரை வெளியேற்றுவதற்காக உள்ள 2 கழிகள் புனரமைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கானூர் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து 9.6 கி.மீட்டர் நீளமுள்ள நீர் வரத்துக்கால்வாய் ஏற்கனவே, சீரமைக்கப்பட்டு உள்ளன. இக்கால்வாயில் 28.21 மில்லின் கனஅடி நீர் சேமிக்க முடியும். கண்மாயில் உள்ள கரைகளை 0.8 மீட்டர் முதல் 1.6 மீட்டர் உயரம் வரை உயர்த்தி பலப்படுத்தப்படுகிறது.
சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியானது ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளன. அரசின் சார்பில் கரையிலிருந்து 30 மீட்டர் நீளத்திற்கு சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 84 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைக்கருவேல் மரங்கள் மராமத்தப் பணிகள் மூலம் அகற்றப்படுகிறது.
கண்மாயிலிருந்து பாசன வசதிக்காக திறந்துவிடப்படும் நீர் எளிதில் சென்றடையும் வண்ணம் வாய்க்கால்களை சீரமைத்திடவும், கண்மாயில் 1 மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளவும், தண்ணீர் வெளியேற்றும் மதகுகளை சீரமைத்து புனரமைத்து பராமரித்;திடவும், முழுக்கொள்ளளவு நீரை சேமித்து அனைத்து ஆயக்கட்டுப்பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
ஆய்வின்போது, நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் சி.முருகேசன், உதவிப்பொறியாளர் எஸ்.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.