சிவகங்கை அருகே செறிவூட்டப்பட்ட பிஸ்கட்: ஆட்சியர் வழங்கல்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு, சிறப்பு உணவாக செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்படுகிறது
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு, சிறப்பு உணவான செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர், அங்கன்வாடி மையத்தில் இன்று செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு உணவான செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் விதி எண் 110 ன் கீழ் “ஊட்டச்சத்தை உறுதி செய் சிறப்பு திட்டத்தின் கீழ் பிறந்தது முதல் 6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை மூலமாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்து குறை பாடுடையவர்களை கண்டறியும் பணி நடைபெற்றது.
அதில் கண்டறியப்பட்ட குழந்தைகளில், பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1,301 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு, அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டது.அதேபோன்று 7 மாதம் முதல் 6 வயது வரையிலான 3,185 குழந்தைகளுக்கு சுருவுகு என்ற குழந்தைகள் சப்பி சாப்பிடும் வகையிலான சிறப்பு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகள் 56 நாட்களுக்கு வழங்கப்பட்டு, தினசரி சாப்பிட வைத்து, அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டு, இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 12.06.2023 அன்று, சிறப்பு உணவான செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்ட 883 குழந்தைகளில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு 60 கிராம் வீதம் 25 நாட்களுக்கு 1.500 கிலோ கிராம் (2 பாக்கெட்டுகள்) அளவிலான பிஸ்கெட் பாக்கெட்டுகளும், 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் 30 கிராம் வீதம் 25 நாட்களுக்கு 750 கிராம் (1 பாக்கெட்) என்ற அளவிலான சிறப்பு உணவான செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, இன்றைய தினம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று, குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்வதற்கு தங்களது பங்களிப்பை முழுமையாக அளித்திட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், மாவட்ட திட்ட அலுவலர் திருமகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.