எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரம்: ஆட்சியர் தொடக்கம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்புகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாகனத்தினை,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி இன்று (17.03.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாணாக்கர்களின் நலன் காத்து வருகிறார்கள். அதில் குறிப்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், சிறப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023 கல்வியாண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை, எட்டு வயதிற் குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பதேயாகும். குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும், முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடு வோம் என்ற அடிப்படையில், விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, இவ்வாகனமானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்வாக எண்ணும் எழுத்தை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் தழுவிய பரப்புரையும், இரண்டாம் நிகழ்வாக பள்ளிகளில் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பரப்புரை வாகனமானது சிவகங்கை நகர் ஆர்.ஆர்.ஆர்.கே.நடுநிலைப்பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கலைக்குழுவினர் களால் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, காளையார்கோவில் வட்டாரம் மற்றும் காரைக்குடி வட்டாரம் ஆகியப் பகுதிகளில் கலைக்குழு வினர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பரப்புரை நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்புகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, தமிழக அரசால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை கல்வி) கோ. முத்துச்சாமி (சிவகங்கை), க.சந்திரகுமார் (தேவகோட்டை), உதவி திட்ட அலுவலர் ஏ.பீட்டர் லெமாயு, வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு), ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பெல்லோஷிப் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.