சிவகங்கை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
Review meeting with government officials on development projects;
தமிழக அரசால் செல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம்:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழக அரசால் செல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா, தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், முன்னிலையில் நடைபெற்றது.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் துறை, மருத்துவத்துறை, நகராட்சிகள், வருவாய்த்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சிறப்புத்திட்ட செயலாக்கம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசால், வேளாண் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம், இடுபொருட்கள் மற்றும் விதை, உரங்களின் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரத்தளவாடங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவு, எய்திய அளவு, நிலுவைக்கான காரணம், கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி, மானியம் போன்றவைகளுக்கும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள், கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் கோழி வளர்ப்பு மற்றும் பால்பண்ணை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை விவரம், கல்வி உதவித்தொகை விவரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம்; செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், விடுதிகளின் செயல்பாடுகள், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மற்றும் பாடநூல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய விபரம், வேலையின் அளவு, மருத்துவத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சைக்காக வழங்கப்பட்ட தொகை, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்தின் அளவு, இருப்பின் அளவு போன்ற அரசுத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் உரியமுறையில் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக சென்றடைந்திட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ச.நாகநாதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்..சுவாமிநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் கே.சுகிதா (சிவகங்கை), டி.பிரபாகரன் (தேவகோட்டை) உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.