சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் மீது, தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.5,580 வீதம் மொத்தம் ரூ.1,11,600 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என ஆக மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1,46,600 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.