சிவகங்கையில் வேளாண் திட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 445 ஊராட்சிகளில் 158 ஊராட்சிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
கலைஞரின், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை காணொலிக்காட்சியின் வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 64 பயனாளிகளுக்கு ரூ.7.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எம்.சூரக்குடியில், தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்.சூரக்குடியில் நடைபெற்ற விழாவில் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன்ரெட்டி, தலைமையில் 64 பயனாளிகளுக்கு ரூ.7.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருவதன் மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களை புதிதாகவும் அறிவித்து, பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்ற விவசாயிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலுள்ள 445 ஊராட்சிகள்; நடப்பாண்டு 2021-2022-ல், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட 68 ஊராட்சிகள் மற்றும் 2022-2023-ல் 90 ஊராட்சிகளும் என, மொத்தம் 158 ஊராட்சிகளில், முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம், அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, விவசாயிகளின் பொருளாதார வசதி மேம்பாட்டிற்கென பல்வேறு வகையான சலுகைகளும் வழங்கப்படவுள்ளது. மேலும், விவசாயத் தொழிலுக்கு இணையாக கால்நடை வளர்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது , பண்ணைக்குட்டை அமைத்தல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, வங்கிக் கடனுதவிகளும் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் சார்பில், இடம் பெற்றுள்ள வேளாண் கருவிகள், விதைகள் ஆகியவைகளை முறையாக அறிந்து கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களின் ஆலோசனைகளின்படி அரசின் பயன்களை பெற்று பயனடைய வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மானிய விலையில் 5 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள், 5 விவசாயிகளுக்கு வரப்பு பயிர்கள், 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டை, 1 பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் தொடங்குவதற்கான ஆணை ஆகியவைகளை வழங்கினார்.