சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான கடனுதவி வழங்கினார்;

Update: 2022-12-24 14:00 GMT

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்குரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதிஸ்டாலின் பேசுகையில்,

டாக்டர்.கலைஞர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர்களின் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியா அளவில் அடிப்படை கட்டமைப்பு, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவைகளில் தமிழகம் சிறந்து விளங்கிடும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்கள்.

பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் , பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, இதுபோன்று தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு முகாமினை மாநிலம் முழுவதும் நடத்திட  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் வேலை நாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இம்மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள், தங்களின் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

அதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பிலும், பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் எந்தத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளித்திட சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5,000 இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் இம்முகாம் இன்றையதினம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத்துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்களின் கல்வித்தகுதிக்கேற்றார் போல் இதில் பங்கு பெற்றுள்ள நிறுவனங்களின் வாயிலாக வேலைவாய்ப்பினை பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், முதலமைச்சர் கடந்த 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்ற முதல் தற்போது நடப்பு மாதம் வரை பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது மட்டுமன்றி, வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.

அதில், சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 2021-ஆம் ஆண்டில் காரைக்குடி வட்டம், செட்டிநாட்டில் ரூ.120 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது, முதலாமாண்டில் 47 மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மேலும், காரைக்குடி வட்டத்தில் 2022-2023 கல்வியாண்டில் புதிய சட்டக்கல்லூரி கடந்த 19.02.2022 அன்று துவங்கப்பட்டு, இக்கல்லூரியில் தற்போது முதலாமாண்டில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதுபோன்று அனைத்துத் துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர் களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் கலந்து கொண்டு, தனியார் நிறுவனங்களின் வாயிலாக வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் பங்கு பெற்று தங்களின் கல்வித் தகுதிக்கேற்றால் போல் வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெற வேண்டும். தாங்கள் பயன்பெறுவது மட்டுமன்றி, தங்களைச் சார்ந்தவர்களுக்கும் எடுத்துரைத்து, பயன்பெறச் செய்ய வேண்டும். இம்முகாமின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, காரைக்குடி நகராட்சிக்குள்பட்ட கவியரசு கண்ணதாசன் மணி மண்டப வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. டாக்டர்.அதுல்யா மிஸ்ரா, நில நிருவாக ஆணையர் எஸ்.நாகராஜன், செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை) காரைக்குடி நகர்மன்றத் தலைவர் சோ.முத்துத்துரை, துணைத்தலைவர் நா.குணசேகரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.வானதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News