சிவகங்கை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கம
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாமினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் துவக்கி வைத்தார்.
முகாமின் போது, 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், 2 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கி, தமிழக அரசின் சார்பில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடிசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நமக்கான அரசாக சிறப்பான முறையில் தமிழகத்தினை ஆட்சி புரிந்து வருகிறார். துறை தலைமை அலுவலர்கள் முதல் கடைக்கோடி ஊழியர்கள் வரை தங்களது பணியினை சிறப்பான முறையில் செய்யும் பொருட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைவரும் சமஅளவில் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி இந்தியா அளவில் சிறந்த முதல்வராக இருந்து வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் ஆட்சி காலத்தில் மக்களின் நலன் காத்திடவும், நோய் வரும் முன் கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளித்திடும் பொருட்டு வரும் முன் காப்போம் திட்டத்தினை மக்களின் பேராதரவுடன் செயல்படுத்தினார்கள். அதற்கு அடுத்த வந்த அரசானது இத்திட்டத்தினை கிடப்பில் போட்டுவிட்டது. மக்களின் நலன் கருதி மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தி கொண்டு வரப்பட்டது. கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம் வீதம் 385 வட்டாரத்திற்கு 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.
இம்முகாமில், பொது மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவத் துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 6,96,756 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 35,760 நபர்களுக்கு இரத்தக்கொதிப்பு நோய், 19,565 நபர்களுக்கு சர்க்கரை நோய், 19,328 நபர்களுக்கு இரண்டு நோய்களும் கண்டறியப்பட்டு அவர்களது இல்லங்களுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. 2,284 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 2,458 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் என 79,400 நபர்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை, உறுதிசெய் திட்டத்தின் கீழ் 23,039 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 1,852 குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. சத்தான உணவுகளை கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 7,122 கர்ப்பிணிப்பெண்களுக்கு ரூ.2.55 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் 1,408 நபர்களுக்கு ரூ.91.47 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. முதல்தவணை தடுப்பூசியாக 11,15,700 நபர்களுக்கும், இரண்டாம்கட்ட தடுப்பூசி 10,33,952 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி 16,692 நபர்களுக்கும் என மொத்தம் 21,66,342 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
17 முகாம்களின், மூலமாக 18,134 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று 18-வது சிறப்பு முகாம் நடைபெற்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் உடல் நலத்தை வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்து தங்களது உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு உரிய பரிசோதனைகள் செய்து பயனடைய வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) எஸ்.ராம்கணேஷ், துணை இயக்குநர் (காசநோய்) வே.இராசசேகரன், வட்டாட்சியர் ம.கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மு.அங்கயங்கண்ணி, ப.சந்திரா, வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த் ராமனாதன், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்விழி நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.