கிராமங்களில் மின்வாரியம் சார்பில் புதிய மின்மாற்றிகள்:அமைச்சர் திறப்பு

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார்;

Update: 2022-11-02 09:30 GMT

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை  அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில்  பல்வேறு கிராமங்களில் புதிதாக நிறுவப்பட்ட  மின்மாற்றிகளை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி மற்றும் கலுங்குப்பட்டி ஆகிய ஊராட்சிகளில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், மின்மாற்றிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்   குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மனித வாழ்வில் மின்சாரத்தின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், அதன் முக்கிய பங்குகள் குறித்தும் காற்றாலை மின்சாரம், சூரியஒளி மின்சாரம், நீர் மின்சாரம் மற்றும் அனல் மின்சாரம் ஆகியவற்றின் மூலம் தற்போது உற்பத்தி திறன் அதிகரிப்பது குறித்தும், வளமான இந்தியா மற்றும் வளமான தமிழகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கி வருகிறார்.

தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதின் உற்பத்தி புதுப்பிக்கத்தக்க உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தி திறன் உயர்த்தப்படும். நுட்பங்களையும், மின் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, மின் சேமிப்பை உயர்த்துதல் மற்றும் விநியோகத்தில் மின் இழப்புகளை குறைத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாநிலத்தில் 24 மணி நேரமும் நம்பகமான மின் விநியோகத்தை பராமரிக்க அனைத்து வகை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தரமான மின்சாரம் வழங்குவதுடன நுகர்வோருக்கு சேவை வழங்கும் நோக்குடன் மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்க சேவை மின்னகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 19.06.2021 முதல் 28.06.2021 வரை கூடிய 10 நாட்களில் தமிழகத்தில் சில பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடையை நீக்கும் நோக்குடன் இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்வதற்காக கூடுதல் மின் கம்பங்களை நிறுவுதல், பழுதடைந்த மின் பெட்டிகளை மாற்றுதல் மற்றும் துணை மின் நிலையங்களை பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சிங்கம்புணரி பகுதியில் மின்மாற்றி விநியோகம் செய்திட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்தவகையில் ரூ.4.66 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 150 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதுபோன்று, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கலுங்குப்பட்டி ஊராட்சி; மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 110 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் தேவைகளை அறிந்தும், கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் ரவி(சிவகங்கை), செயற்பொறியாளர் செல்லத்துரை (திருப்பத்தூர்), ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஹேமலதா (எஸ்.மாத்தூர்), திருச்செல்வம் (ஏரியூர்), சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஜான் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News