சிவகங்கை மாவட்டத்தில் மின்மாற்றிகளை திறந்து வைத்த அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டத்தில் மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.;
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 3 ஊராட்சிகளில் மொத்தம் ரூ.24.51 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரளிக்கோட்டை, வடுவன்பட்டி, முதலியான்பட்டி ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, தெரிவிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிடும் பொருட்டு, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தினை தங்கு தடையின்றியும், சீராகவும் வழங்கிடும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கென 1 இலட்சம் புதிய மின் இணைப்புக்களும், 2022-2023-ஆம் நிதியாண்டில் 50,000 புதிய மின் இணைப்புக்களும் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள்.
அதில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-2022-ஆம் நிதியாண்டில் மொத்தம் 2,363 விவசாயிகளுக்கு மின் இணைப்புக்களும், 2022-2023-ஆம் நிதியாண்டில் 881 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் திருப்பத்தூர் தொகுதியில் மட்டும் 2021-2022-ஆம் நிதியாண்டில் 1,084 விவசாயிகளுக்கு மின் இணைப்புக்களும், 2022-2023-ஆம் நிதியாண்டில் 290 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவர்களின் விவசாயப் பயன்பாட்டிற்கு புதிய மின் இணைப்புக்களை வழங்கி, விவசாய பெருங்குடி மக்களின் உற்ற தோழனாக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மேலும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்மாற்றியினை புதிதாக ஏற்படுத்தித்தரும் பொருட்டு, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட அரளிக்கோட்டை கிராமத்தில், ஏற்கனவே, உள்ள மின்மாற்றியில் இருந்த மின் இணைப்புக்களை பிரித்து, புதிய மின்மாற்றியை மொத்தம் 137 மின் இணைப்புக்களுக்கென ரூ.5,99,860மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினையும் மற்றும் 175 மின் இணைப்புக்களுக்கென வடுவன்பட்டி கிராமத்தில் ரூ.9,03,220 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினையும், 175 மின் இணைப்புக்களுக்கென, முதலியான்பட்டி கிராமத்தில் ரூ.9,47,840 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினையும் என, மேற்கண்ட மூன்று பகுதிகளிலும் மொத்தம் ரூ.24.51 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரான மின்சாரத்தினை தங்கு தடையின்றி வழங்கிடும் பொருட்டு, மேற்கண்ட பகுதிகளில் மின்மாற்றிகளின் கூடுதல் தேவைகள் இருப்பின், அவைகளையும் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப இன்றைய நவீனகாலத்தில் மின்சாரத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு மின் உற்பத்தியினைப் பெருக்கி, தொழில், வர்த்தக ரீதியாகவும், விவசாயப் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அதனை சீராகவும், தங்கு தடையின்றியும் வழங்கிடும் பொருட்டு, ம தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக, நேரில் என்னிடமோ அல்லது தங்களது பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தெரிவிப்பத்தன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர்கள் செல்லத்துரை (திருப்பத்தூர்), ஏ.கே.முருகையா (சிவகங்கை) உதவி செயற்பொறியாளர் எம்.ஜான் எஃப் கென்னடி, உதவிப் பொறியாள்கள் முத்தரசி, சுரேஷ், அப்துல்காதர், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் கே.புவனேஷ்வரி (அரளிக்கோட்டை), த.சசிக்குமார் (வடுவன்பட்டி), பி.முத்துராமன் (முதலியான்பட்டி), மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.