திருப்புவனம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அமைச்சர் பெரிய கருப்பன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2023-07-06 10:24 GMT
திருபுவனம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில்,அமைச்சர் பெரிய கருப்பன் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, 211 பயனாளிகளுக்கு 1 கோடியே 52ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தையும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, அதற்கான திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், அவர்களின் தேவையின் அடிப்படையிலும் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், அப்பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில், முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடத்தை முன்னிட்டு, இப்பூங்காவிற்கு பேரூராட்சியின் சார்பில்  கலைஞர் பெயர் சூட்டப்பட்டு, பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் தற்போது போதுமான அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான பணிகள் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அகில இந்திய அளவில் வங்கிகளின் செயல்பாட்டினை ஒப்பிடும் போது, தமிழகத்தில் கூட்டுறவு வங்கி முதலிடம் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருப்புவனம் கிளையில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையமும் இன்றைய தினம் பொது மக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சிகளின், வாயிலாக சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 15 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 183 உறுப்பினர்களுக்கு ரூ.81,10,000 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான கடனுதவிகளும், 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் கைம்பெண் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோருக்கான கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,00,000 மதிப்பீட்டிலான சிறுவணிகக்கடனுதவியும், 13 பயனாளிகளுக்கு ரூ.11,50,722 மதிப்பீட்டிலான பயிர்கடனுதவியும், 11 பயனாளிகளுக்கு 6,16,000 மதிப்பீட்டிலான பால்மாடு பராமரிப்புக்கடனுதவியும் என ஆக மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.1,00,51,722 மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று ,பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பா.சின்னையா,மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா.ராஜா, பேரூராட்சி துணைத்தலைவர் அ.ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ஹச்.ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்விரவி உட்பட பேரூராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News