சிவகங்கையில் மினி மாரத்தான் போட்டி; பொதுமக்கள் ஆர்வம்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மினி மாரத்தான் போட்டியை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார்.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் இன்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை ஒரு பகுதியாக மினி மாரத்தான் போட்டியை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில், 100 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், பொது சுகாதரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நூற்றாண்டு விழா, பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளும் மினி மாராத்தான் போட்டி நடத்திட துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பொது சுகாதாரத்துறையை சார்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய் சந்திரன், துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மினி மாரத்தான் போட்டியானது , புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, பெரியார் சிலை, வாட்டர் டேங்க், பர்மா காலனி வழியாக அழகப்பா பல்கலைக் கழக அறிவியல் கட்டிடப் பிரிவில் நிறைவடைந்தது. மினி மாரத்தான் போட்டியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பெண்கள் உட்பட பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியில் ஓடியவர்களை, பார்த்த பலரும் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தி தொடர்ந்து ஓடச் செய்தனர்.
இப்போட்டியில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.1000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி., வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் , இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கிடவும், துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர், அறிவுறுத்தினார்.