சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் 22 -ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீர் தினமான (22.03.2023) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்;

Update: 2023-03-16 04:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 22.03.2023 அன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது

உலக தண்ணீர் தினமான (22.03.2023) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22.03.2023 அன்று காலை 11.00 மணியளவில் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப் பொருட்கள் இக்கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேற்காணும் உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ஆம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News